யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 1,016 பேர் வெற்றி – ஆதித்ய ஸ்ரீவஸ்தவா முதலிடம்

புதுடெல்லி: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு (2023) முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அகில இந்திய அளவில் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்ற இளைஞர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஏற்கெனவே ஐபிஎஸ் பயிற்சியில் இருக்கிறார். இவர் ஐஐடி கான்பூரில் பிடெக் பட்டம் பெற்றவராவார்.

இந்தத் தேர்வில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை அனிமேஷ் ப்ரதா, டோனூரு அனன்யா ரெட்டி ஆகியோர் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை படைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

1016 பேர் தேர்வு: 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், இந்திய நிர்வாகப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி, மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பணிகளுக்கு 1016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 664 பேர் ஆண்கள் மற்றும் 352 பெண்கள் ஆவர்.

பொது பிரிவில் 347 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில்115 பேர், ஓபிசி பிரிவில் 303 பேர், எஸ்சி பிரிவில் 165 பேர், எஸ்டி பிரிவில் 86 பேர் என தேர்ச்சியடைந்துள்ளனர். முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல்:

  1. ஆதித்ய ஸ்ரீவஸ்தவா
  2. அனிமேஷ் பிரதான்
  3. டோனூரு அனன்யா ரெட்டி
  4. பி.கே சித்தார்த் ராம்குமார்
  5. ருஹானி
  6. சிருஷ்டி டபஸ்
  7. அன்மோல் ரத்தோர்
  8. ஆஷிஷ் குமார்
  9. நவ்ஷீன்
  10. ஐஸ்வர்யம் பிரஜாபதி

பிரதமர் மோடி வாழ்த்து: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “2023ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்புக்கு கிடைத்த பலன் இது. அவர்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நமது தேசத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கும் உத்வேக வார்த்தைகளை பிரதமர் கூறியுள்ளார். “தோல்வி பயணத்தின் முடிவு அல்ல. தேர்வுகளையும் தாண்டி பிரகாசிக்கக் கூடிய உங்கள் திறமைகளுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன” என்று உற்சாகப்படுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.