'தண்டுபால்யா' பாணியில் உருவாகும் 'தண்டுபாளையம்'

கொடூர கொலை, கொள்ளை கும்பலை மையமாக வைத்து கன்னடத்தில் 'தண்டுபால்யா' என்ற படம் வந்தது. இதில் பூஜா காந்தி நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தது. தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இதே பாணியில் தமிழில் 'தண்டுபாளையம்' என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தை டைகர் வெங்கட், கே.டிநாயக் இணைந்து இயக்கியுள்ளனர். வெங்கட் மூவிஸ் சார்பில் தயாரித்துள்ளது. சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரபிக் கோஷ், ரவிசங்கர், மகரந்த் தேஷ்பாண்டே, ரவிகாலே, நடித்துள்ளனர். இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ஜித்தின் ரோஷன் இசை அமைத்துள்ளார். சித்தூர், பெங்களூரு, கேஜிஎப், திருச்சி, கடப்பா, நகரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படம் பற்றி இயக்குனர் டைகர் வெங்கட் கூறியதாவது: 1980களில் இருந்து இன்றுவரை ஒரு மிகப்பெரிய கொள்ளைக்கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய தென்மாநிலங்களில் கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தொடர்ச்சியாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு பிரிவினரை காவல்துறையினர் கைது செய்தார்கள். 390 திருட்டு வழக்குகள், 108 கொலைக்குற்ற வழக்குகள், 90 பாலியல் பலாத்கார வழக்குகள் என்று, ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இப்போதும் வழக்குகள் நடந்து வருகிறது.

இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை வழங்க முடியவில்லை. குற்றவாளிகளை கைது செய்திருந்த காவல்துறை அதிகாரிகள் மிக மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளனர். கைதானவர்கள் எல்லா வழக்கிலும் விடுதலையாகி வருகின்றனர். இன்னும் 10 வழக்குகள் மட்டும்தான் நிலுவையில் இருக்கிறது. இவர்கள் அனைவரும் எழுதப் படிக்கவே தெரியாத தினசரிக்கூலிகள். இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.