திருவள்ளுவரின் வாழ்க்கை சினிமா தொடங்கியது

உலக பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது. இதனை ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டது. அந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்றதோடு, காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது.

தற்போது திருவள்ளுவர் பற்றிய படம் தயாராகிறது. இதன் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. படத்திற்கு காமராஜ் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் திரைக்கதையை எழுத, ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இதில் திருவள்ளுவராக கலைச்சோழன் அவரது மனைவி வாசுகியாக தனலட்சுமி, நக்கீரனாக சுப்பிரமணிய சிவா, பாண்டிய மன்னனாக ஓஏகே சுந்தர் நடிக்கிறார்கள். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து, வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பாரதியின் வாக்கு மிகையில்லை. இமாலயக் கருத்துகளை ஈரடியில் எளிதாகச் சொல்லிவிடுகிறது திருக்குறள். ஆனால் திருக்குறளின் உள்ளார்ந்த ஒளியை, அதன் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல என்பது திரைக்கதை எழுதும்போது உணர முடிந்தது.

திருவள்ளுவரோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம். மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றன. அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது.

அதோடு அன்றைய மெய்யியல், அறவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் என அத்தனை தரவுகளோடும், சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.