`காந்தியிடம் மட்டுமுள்ள அந்தப் பண்பை ஸ்டாலினிடம் காண்கிறேன்!' – கோவை பிரசாரத்தில் கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு மட்டும் தெரிவித்து வாக்கு சேகரித்துவருகிறது. இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்தத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை டவுன்ஹால் ராஜ வீதியில் நேற்று பிரசாரம் செய்தார்.

கமல்ஹாசன் – திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் – கோவை

அப்போது பேசிய கமல்ஹாசன், “2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் எனக்குத் தோல்வி என்றார்கள். என்னால் என்ன செலவு செய்ய முடியுமோ அதைத்தான் செய்தேன். அதை நான் தோல்வியாகப் பார்க்கவில்லை. என்‌ வாக்கு எண்ணிக்கைகளைப் பாருங்கள். கையில் காசில்லாமல், மக்களின் அன்பை மட்டுமே முதலீடாக வைத்துக் கிடைத்ததை நான் தோல்வியாகக் கருதவில்லை. மக்கள் சேவை என்று வந்துவிட்ட யாரும் தேர்தலில் தோல்வியையோ, போட்டியையோ சந்திப்பதில்லை. அவர்களுக்குத் தோல்வியும் கிடையாது, போட்டியும் கிடையாது. அதற்குச் சிறந்த உதாரணம் அண்ணல் அம்பேத்கரும், காமராஜரும் தான். காமராஜர் தோற்ற பின்பும் இன்றும் காமராஜர் ஆட்சிக் கொடுக்கிறோம் என்று சொல்லி வாய்ஜாலம் காட்டிய கட்சிகள் நிறைய.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றித் தோல்வியை மாறி மாறி பார்த்துவரும் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் பாடம் கற்றவன் நான். 13 வருடங்கள் வனவாசத்திலிருந்து வந்து மீண்டும் கோட்டையில் கொடியேற்றிய கலைஞரிடம் கற்றுக்கொண்டவன் நான். ’தேர்தலே வேண்டாம் எனக்கு, நான் மக்களின் சேவையில் இருக்கிறேன்’ என்று கூறிய பெரியாரின் சீடன் நான். என்னைத் தோல்வியைக் காட்டி பயமுறுத்த முடியாது. மக்கள் தலைநிமிர்ந்து நடமாடும் சனநாயகம் நிறைந்த இந்த ராஜவீதியில் நான் படித்திருக்கிறேன். மீண்டும் நடப்பேன். ஏனென்றால் எனக்கு 2021 தேர்தலில் தோல்வி அறிவிக்கப்பட்ட பின்பு, இந்தத் தேர்தல் குரல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகு, இங்கிருந்த தாய்மார்கள், யூடியூபில் பேசிய வீடியோ காட்சிகளைப் பார்த்தேன். ‘நாங்க‌ போட்ட ஓட்டெல்லாம் என்னாச்சுங்க’,‘ஏன்‌ அவர் வரல?’ என்று பாமரத்தனமாக மிகுந்த அன்புடன் அவர்கள் என் தலையில் வைத்த கிரீடத்தை நான் இன்னும் இறக்கியபாடில்லை. என்னைப்‌ பொறுத்தவரை இது ராஜவீதி தான். அந்த கிரீடத்தை உங்கள் தலையில் வைத்தேத் தீருவேன் நான்.

கோவை பிரசாரம்

1996-ல் பாஜக தலைவர் வாஜ்பாய் 13 நாள்களில் ஆட்சியிழந்த போது, நாடாளுமன்றத்தில், `அரசியல் விளையாட்டு என்றும் இருக்கும். அரசியல் வரும் போகும், விழும் எழும், நாசயமாய் போகும். தேசம் என்றும் இருக்கும். சனநாயகம் நிலைத்திருக்க வேண்டும்’ என்று அவர் பேசிய பேச்சு எனக்கு நினைவிருக்கிறது. பாஜக-வினர் அதனை மறந்து போய்விட்டனர். கிட்டத்தட்ட 350 வருடங்களுக்கு முன்னால் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு, சுயநலத்தில் உறங்கி விட்டோம். கிழக்கிந்தியக் கம்பெனி இறங்கிவிட்டது. அதற்குப் பிறகு 1860-ல் நான்தான்‌ ராணி, நீ தான் அடிமை என்று சொல்லும்போது பதில் பேச வார்த்தைகள் இல்லை நமக்கு. இப்போதும் அதுதான் நடக்கிறது. கைகளில் காசு தருகிறார்கள் என்பதற்காகக் குத்தகைக்கு விட்டுவிடாதீர்கள் உங்கள் எதிர்காலத்தை. இந்தக் கூட்டணி, பயத்தில் வந்த கூட்டணி அல்ல, எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் வந்த கூட்டணி. நான் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு செங்கோட்டையில் பேசும் போதே, என் மனதில் கூட்டணி உருவாகிவிட்டது. அது எனக்கான கூட்டணி அல்ல. நமக்கானது, நாட்டுக்கானது.

முதன்முதலில் பணமதிப்பிழப்பு பற்றிய அறிவிப்பு வரும்போது, நானும் பாமரனாக அண்ணாந்துப் பார்த்துக்கொண்டிருந்தேன், ஒரு பறவை விசிலடித்துக் கொண்டு தரையை நோக்கி வருகிறதென்று. கடைசியில் விழுந்தபின் தான் தெரிந்தது அது வெடிகுண்டு என்று, அரசியலில் மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவன் பெரிய மனிதன். மரியாதையாகப் பேசத் தெரிந்தவன் அதை விட பெரிய மனிதன். எனக்கு இரண்டும் தெரியும். வாழ்க நீவிர் பல்லாண்டு. ஆனால் ஜனநாயக நாட்டில் வாழ்க. இல்லையென்றால் வெள்ளையனைப்போல் வெளியேறுங்கள். இது கோபத்தில் வரும சொல்லல்ல. உங்களைப் பார்த்த பரிதாபத்தில் வந்த சொல்.

கமல்ஹாசன் – திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் – கோவை

உலக மகா ஊழல் ஒன்று நடக்கின்றது. அது எப்படி இத்தனைக் கோடி மக்களுக்கு நடக்கின்றது என்று உலக நாடுகள் கேட்டால், ‘இது உள்நாட்டு விவகாரம் அதை நீ பேசக் கூடாது’ என்றார்கள். சரி என்று நாம் கணக்குக் கேட்டால், ‘அது மக்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை’ என்கிறார்கள். உறைந்து போன எங்கள் வியர்வையில் பனிச்சறுக்கு விளையாடுகிறார்கள் இந்த 21 பணக்காரர்கள். அவர்களை அழிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. 70 கோடி‌ மக்கள் பசியில்லாமல் உறங்கச் செல்ல வேண்டும் என்று சொல்கிறேன். இந்தியாவின் 35 சதவிகித குழந்தைகள் அரைப் பட்டினியோடு தூங்கச் செல்கிறார்கள். இவர்கள் சொல்லும் ஒளிமிகு எதிர்காலம் 2047-ல் இந்த அரைப் பட்டினிக் குழந்தைகள்தான் வேலைக்கு வரப்போகிறார்கள். இதை நீங்கள் கவனிக்காமல் போனால் அந்த இலக்கை எட்ட முடியாது. இது சாபமில்லை, அந்தப் பிள்ளைகளின் வயிற்றெரிச்சல்.

மேல் சட்டை அணியாத காந்தியை, வெள்ளைக்காரன் சர்ச்சில் ‘The Half Naked fakir’ என்றான். அவனுக்குத் துணித் தைத்துக் கொடுத்ததே நாம் தான். அவன் நம்மைப் பார்த்து, ‘The Half Naked fakir’ என்றான். கிட்டத்தட்ட அதே குரல் தான் கேட்கிறது. எங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் என்றால், ‘ஏற்கனவே போட்டது பிச்சை’ என்றார்கள். எனக்கு சர்ச்சிலின் குரல் எதிரொலித்து அங்கு. நாங்கள் பிச்சைக் கேட்கவில்லை. நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை நினைவுபடுத்துகிறோம். பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் தந்த நூற்பாலைகள் இன்று பஞ்சாய் மறைந்துவிட்டன. காரணம் ஜி.எஸ்.டி என்ற இன்னொரு அணுகுண்டு. அதையும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். முதலிடத்தில் இருக்க வேண்டிய நாம் பின்தங்கிவிட்டோம். இருப்பினும், கடந்த 70 முதல் 75 வருடங்களாக‌ நாம் போட்ட உரம், இன்று தமிழகத்தை, இந்திய மாநிலங்களில் முன்னிலையில் வைத்திருக்கின்றது. வரி கட்டும் மாநிலங்களிலும் முக்கியமான இடத்தில் இருக்கிறது. சரியாக வரி கட்டாத உத்தரப்பிரதேசத்துக்கும், பீகாருக்கும் அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவனும் எங்கள் சகோதரன் தான். ஆனால், அந்தப் பணம் அங்கேயாவது போய் சேர்ந்ததா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. அவனும் இங்கு தான் வேலைக்கு வருகிறான்.

கமல்ஹாசன் – திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் – கோவை

அவர்கள் மெதுவாக, தமிழ் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் எங்கள் வாய்களில் இந்தியைத் திணிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தி வாழட்டும்‌. இந்திய மொழிகளில், இந்தி மிகவும் இளைய மொழி. அது வர்த்தகத்துக்காக இரண்டு மொழிகளைக் கலந்து செய்யப்பட்டது. ஆனால், தமிழ் எங்கள் பண்பாடு. இங்கிலாந்தில் எழுத்துகள் உருவாக்கப்படுவதற்கு முன்பே, யாப்பருங்கலக் காரிகை எழுதிய ஊர் இது. இங்கு வந்து, ‘புற்றுநோய் மருத்துவமனை கட்டுகிறேன்’ , ‘IIM கட்டுகிறேன்’ என்ற அடுக்கிக் கொண்டே போகிறார்கள். தேர்தல் நேரத்தில் தான் இதெல்லாம் உங்களுக்கு நியாபகம் வருமா… போலீஸ் ஸ்டேஷன் கட்டுகிறேன் புலனாய்வுத்துறை அமைக்கிறேன் என்று சொல்கிறார்கள். இது எல்லா அரசுகளும் செய்ய வேண்டியவை. தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டியவை அல்ல. என் தம்பி உதயநிதி, ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினால், உங்களுக்கு கோபம் வருகிறது. நீங்கள் ஏன் ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு செங்கல் நட்டு வைத்துவிட்டு போகிறீர்கள்? கட்டிடமே எழுப்பாமல் செங்கல்லை மட்டும் வைத்துக் கொண்டு போனால், அதைப் பொறுக்கியெடுத்துத் தம்பி கோட்டை கட்டி விடுவார். இன்னொரு கோட்டையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அது எங்களுக்கான கோட்டை.

நான் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்தவன். அந்த விமர்சனங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, என் விமர்சனத்தில் என்னவெல்லாம் சொல்லப்பட்டதோ, அதை எல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அது நல்ல தலைமைக்கான அழகு. காந்தியாரிடத்தில் மட்டும் தான், நின்று எதிர்வாதம் செய்ய முடியும். இன்று, டெல்லியில் எந்த தலைவர்களிடமாவது எதிர்வாதம் செய்ய முடியுமா… ‘ஏன் நாட்டை பிரித்துக் கொடுத்தாய்… ‘ஏன் 55 கோடி கொடுத்தாய்’ என்று காந்தியிடம் சென்று கேட்க முடியும். ‘நான் சொல்கிறேன். கோபப்படாதே’ என்று பதில் சொல்வார் காந்தி. அந்தப் பண்பு சனநாயகப் பண்பு. அது ஜெயிலில் தள்ளினாலும், பற்றிக்கொள்ளும் தொற்றிக் கொள்ளும். அப்படி வந்தவர்தான் ஸ்டாலின். படிப்படியாக ஜனநாயகப் பண்பைப் படித்துத் தேர்ச்சி பெற்ற மாணவர்.

கமல், ஸ்டாலின்

நான் இங்கு வெற்றியைத் தேடி வரவில்லை. உங்கள் தொண்டனுக்கு வழி விடுங்கள். நாடாளுமன்றத்தில் தமிழ் குரல் கேட்க வேண்டும்.‌ தமிழனுக்கானக் குரல் கேட்க வேண்டும்‌. சகோதரச் சண்டையில் அந்நியனை உள்ளே விட்டுவிட்டோம். சனநாயகம் என்பதை தமிழக மக்கள், எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்த வேண்டும். நம் குழந்தைகளுக்கு காலை உணவு தரும் அரசு வேண்டுமா அல்லது 35 சதவிகித குழந்தைகளை அரைப் பட்டினியாக வைத்துக்கொண்டு, உள்ளூர்ப் பணக்காரனை உலகப் பணக்காரனாக மாற்றும் இந்த மத்திய அரசு வேண்டுமா… மத்திய அரசு என்பது தனிப்பட்ட நபர் இல்லை. `This personality cult will have to go. You’re the person’. நீங்கள் தான் இந்நாட்டு மன்னர்கள். அதைப் புரிந்து கொள்ளுங்கள். கிரீடம் கையில் இருக்கும் போது யார் யார் தலையிலோ போய் வைக்காதீர்கள். என் தலையிலும் வைக்காதீர்கள். அது, உங்கள் கையில் கிடைத்த செங்கோல்” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.