ஜூ.வி `நச்’ நிலவரம்: தென்சென்னை, தி.மலை, நாகப்பட்டினம், கரூர், விருதுநகர் – முந்துவது யார் யார்?

தி.மு.க-வில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க சார்பில் தமிழிசை செளந்தரராஜன், நாம் தமிழர் கட்சியில் தமிழ்ச்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இலக்கியவாதி என்பதுடன் பெரிய குடும்பத்துப் பெண் என்பதால், சிட்டிங் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் வந்து பிரசாரம் செய்கின்றனர். கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக உழைத்துவருகிறார்கள். முக்குலத்தோர், நாடார் மற்றும் பட்டியலின வாக்குகளைக் குறிவைத்துப் பிரசார வியூகத்தை அமைத்திருப்பது இவருக்கு ப்ளஸ். அதேசமயம், அரசு ஊழியர்கள் மத்தியில் தி.மு.க மீதிருக்கும் அதிருப்தி, தொகுதிக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை என தமிழச்சி மீதிருக்கும் விமர்சனம் மைனஸ். அதை ஈடுகட்டுவதற்கு வைட்டமின் ‘ப’-வை இறக்கும் முடிவில் இருக்கிறது ஆளும் தரப்பு. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 6000 ரூபாய் தந்ததும், ‘மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை’ என தி.மு.க-வினர் பிரசாரம் செய்வதும் களத்தில் எடுபடுகிறது.

‘2014 தேர்தல்போல மீண்டும் தென்சென்னையைக் கைப்பற்றிவிடலாம்’ என்ற நம்பிக்கையோடு தொகுதியில் வலம்வரும் ஜெயவர்தன், மீனவர் சமுதாய வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் வாங்கிவிட முயல்கிறார். அதோடு, கட்சி வாக்குகளையும் அப்படியே அள்ளிவிட வேகமெடுக்கிறார். பர்ஸை தாராளமாகத் திறப்பதால், மாவட்டச் செயலாளர்கள் முதல் அடிமட்ட நிர்வாகிகள் வரை சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறார்கள். ஆனால், தி.மு.க அதிருப்தி வாக்குகளை முழுமையாகப் பெறுவதற்கு, பா.ஜ.க வேட்பாளர் தடையாகிவிட்டார்.

தென் சென்னை நச் நிலவரம்

இரண்டு மாநில ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தென்சென்னையில் போட்டியிடுகிறார் தமிழிசை செளந்தரராஜன். தொகுதியில் இவருக்குள்ள நல்ல அறிமுகம், பிரதமர் மோடி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பிரசாரம் செய்தது, ஏழை, எளிய பெண்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு இவருக்கு ப்ளஸ். அதேசமயத்தில், தேர்தல் பணியாற்றவும், பிரசாரப் பணியில் முழுவீச்சில் ஈடுபடவும் கட்சியில் அடிப்படை நிர்வாகிகள் போதிய அளவில் இல்லை என்பது மைனஸ். பா.ஜ.க-வுக்கென வாக்குகள் இருக்கும் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலேயே,  களப்பணியால் ஓட்டையைப் போடப் பார்க்கிறது தி.மு.க.

தற்போதைய சூழலில், கூட்டணிக் கட்சி பலம் மற்றும் ஆளுங்கட்சி செல்வாக்கோடு,  ‘பசை’யையும் இறக்கி, தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் தென்சென்னையை வென்றெடுக்கிறார். இரண்டாவது இடத்தைப் பிடிப்பதில் ஜெயவர்தனுக்கும் தமிழிசைக்கும் இடையே பலத்த இழுபறி நீடிக்கிறது!

தி.மு.க-வில் சி.என்.அண்ணாதுரை, அ.தி.மு.க-வில் கலியபெருமாள், பா.ஜ.க-வில் அஸ்வத்தாமன், நாம் தமிழர் கட்சியில் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியில் களம் காணும் அண்ணாதுரைக்கு, கடந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவராதது இவருக்கு மைனஸ். ‘வேறு யாருக்கும் தகுதியே கிடையாதா?’ என்று சீட்டுக்காக முட்டி மோதிய உள்ளூர் பிரமுகர்கள் பலரும் பிரசாரக் களத்துக்கு வராமல் ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், கூட்டணி பலம், முதலியார் சமூக வாக்குகள் அண்ணாதுரையை ‘அண்ணாந்து’ பார்க்கச் செய்கின்றன. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோரின் ‘தாராள’த்தாலும், இவர் பக்கமே மீண்டும் ‘அதிர்ஷ்ட’ காற்று வீசுகிறது.

அ.தி.மு.க சார்பில் களமிறங்கியிருக்கும் கலியபெருமாள், முதன்முறையாகப் பொதுத்தேர்தல் களத்துக்கு வந்திருப்பதால், சொந்தக் கட்சியினருக்கே தற்போதுதான் அவரது முகம் பரிச்சயமாகிறது. தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். ஆனால், அந்தச் சமூக மக்களிடம் இவரின் பெயர்கூடச் சென்றடையவில்லை. ஆனாலும், கட்சியின் பலமான வாக்குவங்கி இலையைத் தாங்கிப்பிடிக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தால், வேளாண்குடி மக்களின் ஆதரவுக்கரமும் கலியபெருமாளைத் தூக்கிப்பிடிக்கிறது.

பா.ம.க வாக்குகள் மட்டுமே பா.ஜ.க வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு ப்ளஸ். கிராமங்களில் சேரும் கூட்டம், நகர்ப்புறங்களில் கூடுவதில்லை. ஆன்மிகத் தொகுதி என்றாலும் பா.ஜ.க-வுக்கான அடித்தளமே இல்லாததும், வெளியூர் வேட்பாளர் என்பதும் இவருக்குப் பெரிய மைனஸ். வாக்கு சேகரிப்பில் கவனம் செலுத்தாமல், தி.மு.க-வைத் திட்டுவது, 10.5 சதவிகித இட ஒதுக்கீடு குறித்துப் பேசி அ.தி.மு.க., பா.ம.க-வினரிடையே சண்டை மூட்டிவிடுவது எனத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை நோக்கித் தானாகவே நகர்ந்துகொண்டிருக்கிறார் அஸ்வத்தாமன்.

திருவண்ணாமலை

நாம் தமிழர் வேட்பாளர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ்பாபு, பிரசாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த முறை பெற்ற வாக்குகளையே இந்த முறையும் பெற்றால் போதும் என நினைத்துவிட்டார்போல.

சக்திமிக்க ‘வைட்டமின் ப’ தொகுதி முழுக்க இறைக்கப்பட்டிருப்பதால், இரட்டை இலையையும், தாமரையையும் ஓரங்கட்டி எழுகிறது சூரியன். எ.வ.வேலுவின் ‘கவனிப்போடு’ அண்ணாதுரையே மீண்டும் டெல்லிக்குச் செல்கிறார். இரண்டாமிடம் பெறுகிறார் கலியபெருமாள்!

தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ், அ.தி.மு.க-வில் சுர்ஜித் சங்கர், பா.ஜ.க-வில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் கோவிந்த், நாம் தமிழர் சார்பில் மு.கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்!

வை.செல்வராஜ் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எனத் தனி வாக்குவங்கி கொண்ட பலமான தொகுதி. செல்வாக்கில், அடுத்த நிலையில் இருக்கும் தி.மு.க-வும் கூட்டணியில் இருப்பது வை.செல்வராஜுக்குக் கூடுதல் பலம்.அதேசமயம், தேர்தல் செலவுக்கே பணம் இல்லாமல் வேட்பாளர் திண்டாடுவதால், கூட்டணிக் கட்சியினர் சுணக்க மடைந்திருப்பது, பிரசாரத்திலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, இரண்டு மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் சேர்ந்தவர் சுர்ஜித் சங்கர். தாராளமாகப் பாயும் வைட்டமின் ‘ப’, மக்களைக் கவரும் பேச்சுத் திறமை, தனக்கென தனியாக வார் ரூம் அமைத்துத் தேர்தல் பணி என ஹைடெக்காக வலம்வருகிறார் சுர்ஜித் சங்கர். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பது இவருக்கான பலம்.

அதேசமயம், கட்சியில் சேர்ந்தவுடனேயே வேட்பாளர் ஆனது, கடைநிலைத் தொண்டர்களை எட்டாத வைட்டமின் ‘ப’ ஆகியவை அ.தி.மு.க தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கின்றன. முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். ‘தன் பழைய ஆதரவாளர்களால்’ காங்கிரஸ் வாக்குகளையும் சேர்த்து அறுவடை செய்யலாம் என சுர்ஜித் சங்கர் எடுத்த முயற்சி பலனளிக்காதது போன்றவை மைனஸ்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி., மறைந்த எஸ்.ஜி.முருகையனின் மகன் என்ற அடையாளத்துடன் வலம்வருபவர் எஸ்.ஜி.எம்.ரமேஷ். சிட்டிங் எம்.பி செல்வராசுவின் மைத்துனர். தி.மு.க-வைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயனின் மருமகன் என்பது கூடுதல் பலம். அ.ம.மு.க., பா.ம.க கூட்டணி பலத்துடன் களமிறங்கியிருப்பது இவருக்கான ப்ளஸ். ஒரே கட்சியில் இல்லாமல் கட்சி மாறியது, செல்வராசுவும் ஏ.கே.எஸ்.விஜயனும் ‘தங்கள் பெயரைப் பயன்படுத்தக் கூடாது’ எனக் கறார் காட்டியிருப்பது ஆகியவை மைனஸ்.

தற்போதைய நிலவரப்படி, தி.மு.க-வின் பலத்தால் வை.செல்வராஜ் வாகை சூடுவார். இரண்டாமிடத்துக்கு சுர்ஜித் சங்கருக்கும், மூன்றாமிடத்துக்கு எஸ்.ஜி.எம்.ரமேஷும் வந்து சேர்கிறார்கள்!

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, அ.தி.மு.க-வில் எல்.தங்கவேல், பா.ஜ.க சார்பில் வி.வி.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியில் மருத்துவர் கருப்பையா ஆகியோர் களத்தில் மோதுகிறார்கள்.

செந்தில் பாலாஜி தரப்பின் ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘தொகுதிக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை’ என்று தொகுதிக்குள் ஆங்காங்கே கிளம்பிவரும் விமர்சனங்களால் கலக்கத்தில் இருக்கிறார் சிட்டிங் எம்.பி ஜோதிமணி.

ஆனால், தனிப்பட்ட முறையில் எந்தக் கெட்ட பெயரும் இல்லாதது, ‘நான் ஜெயித்து, நன்றி அறிவிக்க செந்தில் பாலாஜியை உடன் அழைத்துவருவேன்’, ‘எனக்கு அம்மா இல்லை. நீங்கள்தான் என் குடும்பம்’ என்றெல்லாம் சென்டிமென்ட்டாகப் பேசி வாக்குகள் சேகரிப்பது மக்கள் மத்தியில் அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்துகிறது.

எல்.தங்கவேல், தேர்தலுக்குப் புதியவர் என்றாலும் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸில் இருப்பதால், தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர். இரட்டை இலைச் சின்னம் கூடுதல் பலம். ஸ்வீட்டை தாராளமாக ஊட்டிவிடுவதால், கட்சியினர் உற்சாகமாக வேலை செய்கின்றனர். ஜோதிமணிக்கு டஃப் ஃபைட் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

பா.ஜ.க கரூர் மாவட்டத் தலைவரான வி.வி.செந்தில்நாதன், ஏற்கெனவே அ.தி.மு.க-வில் இருந்தபோது அரவக்குறிச்சியில் இரண்டு முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டவர் என்பதால், இவருக்குத் தொகுதியில் நல்ல அறிமுகம் இருக்கிறது. இந்த நிலையில், கரூர் தொகுதியில் பா.ஜ.க-வுக்கான செல்வாக்கை வெள்ளோட்டம் பார்க்க இந்தத் தேர்தலைப் பயன்படுத்துகிறார் அண்ணாமலை. அவர் கொடுக்கும் கூடுதல் சப்போர்ட் வி.வி.செந்தில்நாதனுக்குக் கூடுதல் ‘தெம்பு’ தருகிறது.

கரூர்

நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த முறை தேர்தலைச் சந்தித்த மருத்துவர் கருப்பையாவே இந்த முறையும் வேட்பாளராகியிருக்கிறார். கடந்த முறை பெற்ற வாக்குகளைவிடக் கூடுதலாகப் பெற வேண்டும் என்ற வேட்கையோடு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

ஜோதிமணிக்குக் கடந்த முறை இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. மேலும், தொகுதியில் ஆங்காங்கே எழும் எதிர்ப்பு, செந்தில் பாலாஜி தரப்பின் சுணக்கம் ஆகியவை அவரை பலவீனப்படுத்துகின்றன. இரட்டை இலையை, ‘கை’யால் மறைப்பது அவ்வளவு எளிதில்லை என்பதே தற்போதைய நிலவரம்.  ஜோதிமணிக்கும் தங்கவேலுக்கும் இடையே போட்டி கடுமையாக நடக்கிறது. சளைக்காமல் மூன்றாமிடத்தைக் குறிவைக்கிறார் வி.வி.செந்தில்நாதன்!

காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன், பா.ஜ.க சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் என ஸ்டார் தொகுதியாக கவனம் ஈர்க்கிறது விருதுநகர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கெளசிக் களமாடுகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஏற்கெனவே இரண்டு முறை எம்.பி-யாக இருந்தவர். தொடர்ந்து நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார். எளிமையானவர், நன்கு பழகக்கூடியவர். கூட்டணிக் கட்சியின் செல்வாக்கு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என இரண்டு அமைச்சர்களின் ஒத்துழைப்பு, வேட்பாளரின் சமுதாய வாக்குகள் ஆகியவை அவருக்கு ப்ளஸ்.

கடந்த ஐந்தாண்டுகளில் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களின் சம்பளப் பிரச்னை, கல்விக் கடன், மருத்துவக் காப்பீடு, ஆங்காங்கே பேருந்து நிறுத்தம் எனச் செய்த பணிகள் ப்ளஸ். ஆனால், இந்தத் தொகுதியின் வாழ்வாதாரப் பிரச்னைகளான பட்டாசு, தீப்பெட்டி, நெசவுத் தொழில், மருத்துவம், இ.எஸ்.ஐ., ரயில்வே மேம்பாலம் உள்ளிட்டவற்றையெல்லாம் அந்தரத்தில் விட்டதில் கிராமப்புற மக்களிடையே அதிருப்தி இருக்கிறது. இது அவருக்கு மைனஸ்.

தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன், அ.தி.மு.க வாக்குகள், அனுதாப வாக்குகள், சிட்டிங் எம்.பி‌ மீதான அதிருப்தி வாக்குகள், சமூகரீதியான வாக்குகள் எனக் கணிசமான ஓட்டுகளைப் பிரிப்பார். விஜயகாந்த்தின் மகன் என்பதும், யதார்த்தமான பேச்சும் அவருக்கு ப்ளஸ். ஆனாலும், ஒருங்கிணைந்த பணி இல்லாமல் கே.டி.ராஜேந்திர பாலாஜியை மட்டும் வைத்து ‘ஒன் மேன் ஷோ’ காட்டும் அ.தி.மு.க., மெத்தனமாகப் பணியாற்றும் தொண்டர்கள் விஜய பிரபாகரனுக்கு மைனஸ்.

பா.ஜ.க வேட்பாளர் ராதிகாவுக்கு, கூட்டணிக் கட்சியான அ.ம.மு.க-வின் வாக்குகள் கிடைக்குமென்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், சமூகரீதியான வாக்குகளைக் குறிவைத்து ராதிகா களமிறக்கப்பட்டிருப்பதும், பிரசாரத்தில் சினிமாத்தனம் செய்வதும், ச.ம.க-வை, பா.ஜ‌.க-வோடு இணைத்த அதிருப்தியுமே அவரை மூன்றாம் இடத்தை நோக்கிப் பின்னுக்கு இழுக்கின்றன.

விஜய பிரபாகரன் விடாமல் துரத்தி வந்தாலும், விருதுநகரில் மறுபடியும் வெற்றி வாகை சூடவிருப்பது மாணிக்கமே!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.