வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்த… எங்களிடம் 23 யோசனைகள்; ராகுல் காந்தி பேட்டி

காசியாபாத்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என தொடர்ந்து கூறி வருகிறது. இதுபற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கூறும்போது, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கூட லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த பணியிடங்கள் அனைத்தும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிரப்பப்படும் என உறுதிப்பட கூறினார்.

அவர் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வழங்கிய தரவுகளின்படி, 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் முக்கியமான துறைகளை பொறுத்தவரை, ரெயில்வேயில் 2.93 லட்சம் பணியிடங்கள், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சம், ராணுவ அமைச்சகத்தில் 2.64 லட்சம் பணியிடங்கள் காலியாகி இருக்கின்றன.

15 மிகப்பெரிய துறைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இருக்கிறதா? பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வரும் பிரதமரின் அலுவலகத்திலேயே ஏன் அதிக எண்ணிக்கையிலான மிக முக்கியமான பதவிகள் காலியாக உள்ளன? என கேள்வி எழுப்பினார்.

நிரந்தர பணிகளை வழங்குவது ஒரு சுமை என பா.ஜ.க. கருதுகிறது. தொடர்ந்து ஒப்பந்த பணி முறையை ஊக்குவித்து வருகிறது. அவற்றில் பாதுகாப்போ, மரியாதையோ இல்லை. காலியான பணியிடங்களை பெறுவது நாட்டின் இளைஞர்களின் உரிமை. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு வலிமையான திட்டம் எங்களிடம் உள்ளது என சமீபத்தில் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று அளித்த பேட்டியின்போது சில விவரங்களை கூறியிருக்கிறார். அவர் பேசும்போது, நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில், பணமதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியது மற்றும் அதானி போன்ற பெரிய கோடீசுவரர்களை ஆதரித்தது என வேலைவாய்ப்பு உருவாக்க நடைமுறையை பிரதமர் மோடி குறைத்து விட்டார்.

வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்துவதே எங்களுடைய முதல் பணி. இதற்காக எங்களுடைய தேர்தல் அறிக்கையில் 23 யோசனைகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம். அவற்றில் ஒன்று, புரட்சிகர திட்டம். அது என்னவென்றால், தொழிற்பயிற்சிக்கான உரிமை என கூறினார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த அனைவருக்கும் நாங்கள் தொழிற்பயிற்சிக்கான உரிமையை வழங்குவது என முடிவு செய்துள்ளோம். இதற்காக பயிற்சி வழங்கப்படும். இளைஞர்களின் வங்கி கணக்கில் ஆண்டொன்றுக்கு வைப்புத்தொகையாக ரூ.1 லட்சம் செலுத்தப்படும்.

கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த உரிமைகளை நாங்கள் வழங்குகிறோம். வினாத்தாள் கசிவு விசயத்தில் கூட நாங்கள் சில சட்டங்களை இயற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.