8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் களம் காணும் முதற்கட்டத் தேர்தல்

புதுடெல்லி: நாளை மறுநாள் நடைபெற உள்ள முதற்கட்டத் தேர்தலில், 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள்(ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகள் என மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில், 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் களத்தில் உள்ளனர். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

அருணாச்சலப் பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதியில் இருந்து மூன்று முறை மக்களவைக்குத் தேர்ந்தடுக்கப்பட்ட 52 வயதான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார். மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சரான சர்பனாதா சோனோவால், அசாமின் திப்ருகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் தொகுதியில், சமாஜ்வாதி கட்சியின் ஹரீந்திர மாலிக் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தாரா சிங் பிரஜாபதி ஆகியோருக்கு எதிராக மத்திய அமைச்சர் சஞ்சீவ் பலியன் களத்தில் உள்ளார்.

இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் ஜூனியர் அமைச்சராகவும் இருந்த ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து களத்தில் உள்ளார்.

மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான பூபேந்திர யாதவ், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தின் மத்ஸ்யா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ லலித் யாதவுக்கு எதிராக களம் காண்கிறார்.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கோவிந்த் ராம் மேக்வாலை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அதிமுகவின் ஜெயவர்த்தன் ஆகியோருக்க எதிராக களம் காண்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.