ஆலியா பட் முதல் சத்ய நாதெல்லா வரை.. ‘டைம்’ இதழின் சக்திவாய்ந்த 100 நபர்களில் 8 இந்தியர்கள்

‘டைம்’ இதழ் 2024ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 8 இந்தியர்கள் இடம்பெற்று சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர்.

உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா, ஒலிம்பிக் பதக்க மங்கை சாக்‌ஷி மாலிக், இண்டோ – பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல், பாலிவுட் நடிகை ஆலியா பட், மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, அமெரிக்க அரசுத் துறை ஊழியர் (US Department of Energy’s Loan Programmes Office director ) ஜிகர் ஷா, வானியல் துறை பேராசிரியை பிரியம்வதா நடராஜன், இந்திய வம்சாவளி உணவக தொழிலதிபர் அஸ்மா கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டைம் இதழ் தலைசிறந்த தலைவர்கள், தனித்துவம் பதித்தவர்கள், டைட்டன்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 100 சக்திவாய்ந்த நபர்களைப் பட்டியலிடுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் பட்டியலில் 8 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர அமைதிக்கான நோபல் விருது பெற்ற நர்கிஸ் முஹமதி, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யுலியா நவல்னி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆலியா பட்: இயக்குநர் மகேஷ் பட் – நடிகை சோனி ரஸ்டான் தம்பதியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஆலியா பட், இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். கதாநாயகியாக அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டாலும், ’டியர் ஸிந்தகி’, ‘ராஸி’, ‘கங்குபாய் கத்தியாவாடி’ உள்ளிட்ட படங்களில் தன்னுடைய நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.

அஜய் பங்கா: உலக வங்கித் தலைவராக உள்ள அஜய் பங்கா இந்தியாவின் புனே நகரில் பிறந்தவர். செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் பின்னர் அமெரிக்கா சென்றார். உயர்கல்விக்குப் பின்னர் 2007ல் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

சாக்‌ஷி மாலிக்: ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த விளையாட்டில் இந்தியாவுக்காக முதல்முறையாக பதக்கம் வென்ற வீராங்கனை சாக்‌ஷி மாலிக். ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

நர்கிஸ் முஹமதி: ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதி டாப் 100 சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஈரான் நாட்டுப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதற்காகவும், மரண தண்டனைகளை எதிர்த்து மனித உரிமைகள், சுதந்திரத்துக்காக போராடி வருவற்காகவும் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மனித உரிமைகள் பாதுகாப்போர் அமைப்பின் Defenders of Human Rights Center (DHRC) துணைத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுலியா நவல்னி: சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யுலியா நவல்னி டாப் 100 சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அலெக்ஸ் நவல்னி ‘எதிர்கால ரஷ்யா’ என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருந்தவர். வழக்கறிஞர், ஊழலை – அதிலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்துவருவதாக நம்பப்படும் ஊழலை தீவிரமாக எதிர்த்தவர் என்ற நிறைய அடையாளங்கள் அவருக்கு இருந்தன. ரஷ்ய நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டும், ஊழல் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர்.

ரஷ்யாவில் மக்களுக்கிடையே இவருக்கு அதிகரித்த செல்வாக்கு காரணமாகவும், புதினின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டில் ஊழலுக்கு எதிராகப் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்ததால் உலக அளவில் பேசப்பட்டவர். அவர் சிறையில் மர்ம மரணம் அடைந்த நிலையில் அவரது மனைவி யுலியாவின் பேச்சுக்கள் உலக அளவில் கவனம் ஈர்த்தன. புதின் மீது பகிரங்க குற்றஞ்சாட்டிய யுலியா தன் கணவரின் மரணத்துக்கான நீதியை நிலைநாட்டுவேன் என்று சூளுரைத்துள்ளார்.

இவ்வாறாக டைம் இதழ் 100 சக்திவாய்ந்த நபர்கள் பட்டியல் பல்துறை சுவாரஸ்ய முகங்களைக் கொண்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.