இந்தியா இன்னும் வளரவில்லை; இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்க காரணம் இதுதான் ? – ரகுராம்ராஜன் அதிரடி!

அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் “2047-க்குள் இந்தியாவை ஒரு முன்னேறிய பொருளாதாரமாக மாற்றுவதற்கு என்ன தேவை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார்.

அதில் அவர் பேசும் போது, “ஜனநாயகத்தின் மையமாக இந்தியா இருக்கிறது. ஆனால் அதன் பயன்களை இந்திய மக்கள் இதுவரை அனுபவிக்கவில்லை. ஜி.டி.பி வளர்ச்சி எண்களையெல்லாம் கருத்திலேயே கொள்ளாதீர்கள். ஏனெனில் நாம் அடைந்திருப்பது 6% ஜி.டிபி வளர்ச்சி. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரை இது மிகவும் குறைவு. ஏனெனில் நமது வளர்ச்சி சீனா, கொரியா போன்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே உள்ளது. அதனால்தான் நான் சொல்கிறேன் நாம் எப்போதெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் இன்னும் கீழே சென்றுகொண்டே இருக்கிறோம்.

ரகுராம் ராஜன்

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் காரணம். எப்படி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்கிற கேள்விக்கு முதலில் மக்களுடைய தரத்தை மேம்படுத்த வேண்டும் அடுத்ததாக வேலைவாய்ப்புகளின் தன்மையை மாற்ற வேண்டும் என்பதுதான் எனது பதிலாக இருக்கும். ஏனெனில் இந்த இரு வகைகளிலும் ஒரே சமயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நமது பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

நமது பொருளாதாரத்தைச் சிறந்த ஒன்றாக மாற்ற இன்னும் நாம் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. அதனால் திறமைமிக்க மாணவர்கள் நமது நாட்டிற்கு வேண்டும். பில்லியன் கணக்கான டாலர்களை இந்தியா சிப் உற்பத்தி செய்வதில் செலவிடுகிறது. அரசின் அதிகப்படியான மானியப் பணமானது இந்த சிப் தொழிற்சாலைகளுக்கே அளிக்கப்படுகிறது. ஆனால் இது போன்ற முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய தோல் தொழிற்சாலைகள் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்த துறைகளில் எல்லாம் மிகவும் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

வேலைவாய்ப்புகள் இல்லை என்பதைக் கேட்டு நாம் அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. இந்த வேலைவாய்ப்பின்மை பிரச்னைகள் கடந்த பத்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவை அல்ல. பல சகாப்தங்களாக அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பலகீனமான துறைகளைக் கண்டறிந்து அதில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்காவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ஜி.டி.பி

இந்தியாவைச் சேர்ந்த பல இளம் கண்டுபிடிப்பாளர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்தச் சிங்கப்பூருக்கும் சிலிகான்வேலிக்கும் செல்கின்றனர். அவர்கள் இந்தியாவை விட்டுப் பிற நாடுகளுக்குச் செல்ல எது காரணமாக இருக்கிறது என்பது குறித்து அவர்களில் சிலரிடம் நான் பேசிய போது நாங்கள் உலகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப்போகிறோம் என்றும் இந்தியாவில் இருப்பதை விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர். அவர்கள் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் உலகளவில் பிரபலப்படுத்த விரும்புகிறார்கள்.

இப்போதைய இந்தியாவின் இளைஞர்களின் மனதில் விராட்கோலி தான் குடிகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு கிரிகெட் மோகம் அதிகரித்திருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்தது என்பதால், நான் இன்னும் விளக்கமாகக் கூற விரும்பவில்லை. உற்பத்திக்கான முதலீடுகள் அதிகரித்த வண்ணம் இருந்தாலும், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொழிலாளர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது.  இதை முதலில் சரிசெய்ய வேண்டும்” என பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.