கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான இன்றைய ஐபிஎல் 2024 போட்டி சண்டிகர் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.  இரண்டு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து இருந்தது. மும்பை அணி 9வது இடத்திலும், பஞ்சாப் அணி 8வது இடத்திலும் புள்ளி பட்டியலில் இருந்தது.  இதனால் இரண்டு அணிகளுக்கும் வெற்றி தேவை என்ற நிலையில் இன்றைய போட்டியில் விளையாடியது. 

 

மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர்.  இஷான் கிசான் 8 ரன்களில் ரபாடா வேகத்தில் வெளியேறினார். கடந்த போட்டியில் சதம் அடித்திருந்த ரோஹித் சர்மா அதே பார்மில் சிறப்பாக விளையாடினார்.  ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இடையேயான பார்ட்னர்ஷிப் மும்பை அணிக்கு பெரிதும் உதவியது. ரோகித் சர்மா 36 ரன்களுக்கும், சூரியகுமார் யாதவ் 78 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களம் இறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார்.  அதன் பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 10 ரன்களும், டிம் டேவிட் 14 ரன்களும் அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்களையும், கேப்டன் சாம் கர்ரன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டிக்கெட் இழந்து தடுமாறியது. பும்ரா மற்றும் கோட்ஸியின் வேகத்தில் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் சாம் கர்ரன் 6 ரன்களுக்கும், பிரப்சிம்ரன் சிங் 0 ரன்களுக்கும், ரிலீ ரோசோவ் 1 ரன்னுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் 1 ரன்னுக்கும் அவுட் ஆகி வெளியேறினர்.  ஒரு கட்டத்தில் இந்த போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வென்று விடும் என்ற நிலையில் இருந்தது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா போட்டியை பஞ்சாப் பக்கம் திருப்பினர். ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 41 ரன்கள் அடித்து வெளியேறினார்.

ஆனாலும் கடைசி வரை போராடிய அசுதோஷ் சர்மா 28 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் குவித்தார். மும்பை இந்தியன்ஸ் பக்கம் இருந்த எளிதான வெற்றியை கடைசிவரை போராடி சிறிது நேரம் பஞ்சாப் பக்கம் கொண்டு வந்தார் அசுதோஷ் சர்மா. ஆனாலும் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய மும்பை அணி, பஞ்சாப் அணியை 19.1 ஒரு ஓவரில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இதனால் மும்பை அணி இந்த போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கோட்ஸி மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.