கேரள களம் | “பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் கட்சி சீரழிந்து வருகிறது” – பினராயி விஜயன் சாடல்

திருவனந்தபுரம்: “பாஜக உடனான காங்கிரஸின் போட்டி என்பது தேர்தல் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டி என்பதாகவே உள்ளது. கருத்தியல் ரீதியாக இல்லை. அக்கட்சி பாஜகவின் ‘பி’ டீமாக சீரழிந்து வருகிறது.” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “வயநாட்டில் நடந்த ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கொடிகளைக் காட்டவில்லை. இது காங்கிரஸின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை பலவீனப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு. காங்கிரஸ் கட்சியும், யுடிஎப் கூட்டணியும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கூட்டணிக் கட்சியின் கொடியை உயர்த்தி பிடிக்கக் கூட அவர்கள் போராடுகிறார்கள். பாஜகவை எதிர்ப்பதற்கான உண்மையான கருத்தியல் காங்கிரஸிடம் இல்லை. பாஜக உடனான காங்கிரஸின் போட்டி என்பது தேர்தல் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டி என்பதாகவே உள்ளது. கருத்தியல் ரீதியாக இல்லை. அதிகார அரசியலை பெறுவதில் தனது முழு கவனத்தை செலுத்தும் கட்சியாக காங்கிரஸ் பரிணமித்துள்ளது. அக்கட்சி பாஜகவின் பி டீமாக சீரழிந்து வருகிறது. அதேநேரம், இடது ஜனநாயக முன்னணியோ தனது வலுவான செயல்திறனில் நம்பிக்கை கொண்டுள்ளது.” என்று பேசியுள்ளார்.

இதேபோல் தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து பேசிய பினராயி விஜயன், “தேர்தல் கருத்துக் கணிப்புகள் சில ஏஜென்சிகளின் ஆதரவுடன், பொதுமக்களை தவறாக வழிநடத்த மட்டுமே உதவுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களையும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும், கேரள காங்கிரஸ் (எம்) ஒரு இடத்தையும் வென்றது. ஆலப்புழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒரு இடத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டத்தில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.