செய்தித் தெறிப்புகள் @ ஏப்.18: வாக்குப்பதிவுக்கு தயாரான தமிழகம் முதல் ‘இவிஎம்’ குறித்த புதிய விளக்கம் வரை

மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றாலும், 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள முதல்கட்டத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 102 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 73 பொதுத் தொகுதிகள், 18 எஸ்சி தொகுதிகள், 11 எஸ்டி தொகுதிகள் அடங்கும். 21 மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், வாக்களிக்க 16.63 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில், 8.4 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 8.23 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 11,371 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 35 லட்சத்து 67 பேர் முதல்முறை வாக்காளர்கள். 20-29 வயதுக்குள் உள்ள இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.51 கோடி. முதற்கட்டத் தேர்தலில் ஆயிரத்து 625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களில் 1,491 பேர் ஆண்கள், 134 பேர் பெண்கள் ஆவர்.

தயார் நிலையில் தமிழகம்!: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடி ஆகும். முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் ஒரு லட்சம் போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான, வெள்ளிக்கிழமை அன்று சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு: தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. வழக்கு விசாரணையின்போது, இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

இபிஎஸ் மீது தயாநிதி மாறன் வழக்கு: “95 சதவீதத்துக்கு மேல் எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன். என் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டது. கரோனா சமயத்தில் நிதி தடுத்து வைக்கப்பட்டது. எனினும், ரூ.17 கோடியில் மீதமிருப்பது ரூ.17 லட்சம்தான்” என்று கூறி, மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என பேசியதற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு ரத்து: கள்ளழகர் திருவிழாவின்போது தண்ணீர் பீய்ச்சுவதற்கு கட்டுப்பாடு விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

“வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கேஜ்ரிவால்”: டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உட்கொள்கிறார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. சர்க்கரை நோயாளியான அவர் தனது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வகையில் இவ்வாறு செய்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

இதனை எதிர்த்த கேஜ்ரிவாலின் வழக்கறிஞர் விவேக் ஜெயின், “ஊடகங்களுக்கு தீனி போட வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத் துறை இத்தகைய வாதத்தை முன்வைத்துள்ளது. கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுகிறேன். வேறொரு மேம்பட்ட மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.

“காங்கிரஸின் ‘ராகுல்யான்’ நிலை…”- ராஜ்நாத் சிங் கிண்டல்: “காங்கிரஸ் கட்சியின் ‘ராகுல்யான்’ இன்னும் எந்தப் பகுதியிலும் நிலைநிறுத்திப்படவில்லை” என்று ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் பாதுக்காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்தார். மேலும் அவர், “உத்தரப் பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு ராகுல் காந்தி புலம்பெயர்ந்துள்ளார். கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார். இந்த முறை வயநாட்டிலும் ராகுல் காந்தி வெற்றி பெற மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

“பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் சீரழிந்து வருகிறது”: “பாஜக உடனான காங்கிரஸின் போட்டி என்பது தேர்தல் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டி என்பதாகவே உள்ளது. கருத்தியல் ரீதியாக இல்லை. அக்கட்சி பாஜகவின் ‘பி’ டீமாக சீரழிந்து வருகிறது.” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ரூ.4.09 கோடி பறிமுதல்: புதுச்சேரியில் இரு வீடுகளில் இருந்து ரூ.4.09 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வருமான வரித் துறையினர் விசாரணை நடந்து வருகிறது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

இவிஎம் புகார் – தேர்தல் ஆணையம் திட்டவட்ட மறுப்பு: கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக சொல்லப்பட்ட சம்பவம் உண்மையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தலில் கேரளாவில் இம்மாதம் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காசர்கோடு சட்டமன்ற பகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. விவிபாட் இயந்திரத்துடன் நடந்த மாதிரி வாக்குப்பதிவில், ஒருமுறை பொத்தான் அழுத்தினால், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக, இத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை ஒன்றின்போது முன்வைக்கப்பட்டது. அப்போது, “இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து பதிலளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள, உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பதிலை அளித்தனர். அதில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்னதாக முன்பு பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு விடும். ஏதேனும், ஒரு சில இடங்களில் பழைய வாக்குகள் கணக்காக காண்பிக்கும். அதுவும் மாதிரி வாக்குப்பதிவின் போது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடும். மேலும், மாதிரி வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுது உள்ளதா என்பதும் சரிபார்க்கப்படும். இவை அனைத்தும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும்.

காசர்கோடு சம்பவத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு கூடுதல் வாக்குகள் பதிவாகிறது என்பது உண்மை இல்லை. இது உண்மைக்கு புறம்பான செய்தி. அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

பாகூர் வாக்குச்சாவடியில் தாமரைப் பூ அலங்காரம் அகற்றம்: புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவற்றை தேர்தல் அதிகாரிகள் அகற்றி அப்புறப்படுத்தினர்.

மோடியை சாடிய ராகுல் காந்தி: வேலைவாய்ப்பு சந்தைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையே நரேந்திர மோடி ஒரு தடையை உருவாக்கியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “இந்தியா வல்லரசாகும் என நம்மால் எப்படி பேச முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே “இது சாதாரண தேர்தல் அல்ல. நமது நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா பள்ளி மீது தாக்குதல்: பள்ளிக்கு மாணவர்கள் சீருடை அணியாமல் காவி உடை அணிந்து வந்தது குறித்து கேள்வி எழுப்பியதால், தெலங்காவின் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது மத அமைப்பைச் சேர்ந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய உள்ளது.

28 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்: கூகுள் நிறுவனம் – இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை என்றும், அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷில்பா ஷெட்டி, கணவரின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு சொந்தமான ரூ.97.79 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பிட்காயின் மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.