செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு இறுதி தகவலை அனுப்பிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்

வாஷிங்டன்:

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. இந்த ரோவர் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேடர் என்கிற இடத்தில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெர்சவரன்ஸ் ரோவருடன் இன்ஜெனியூட்டி என்கிற சிறிய ஹெலிகாப்டரும் (டிரோன்) அனுப்பப்பட்டிருந்தது. ரோவர் பயணிக்கும் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்புகளை கண்காணிக்க இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. ரோவரின் செயல்பாடுகளையும் கண்காணித்து அவ்வப்போது தகவல்களை அனுப்பி வந்தது.

முதல் முறையாக 2021-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி செவ்வாய் கிரகத்தில் பறந்து தனது பணியை தொடங்கிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர், இதுவரை 72 முறை பறந்துள்ளது. அதேசமயம் பெர்சவரன்ஸ் ரோவர் பல்வேறு இடங்களில் பாறைகளை துளையிட்டு துகள்களை சேகரித்துள்ளது.

இந்நிலையில், இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் தனது இறுதி தகவலை பூமிக்கு அனுப்பியிருக்கிறது. இனி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு அசைவற்ற நிலையில், தரவுகளை சேகரிக்கக்கூடிய அமைப்பாக இன்ஜெனியூட்டி செயல்படும் என்றும், எதிர்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும் தரவை சேகரிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

மேலும், பெர்செவரன்ஸ் ரோவரால் சேகரிக்கப்பட்ட செவ்வாய் கிரக பாறை மாதிரிகளை பூமிக்கு விரைவாகவும் குறைந்த செலவிலும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக நாசா கூறியிருக்கிறது. பட்ஜெட் அதிகமாகிவிட்டதாக கடும் விமர்சனம் எழுந்த நிலையில், நாசா இவ்வாறு தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.