நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

புதுடெல்லி:

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். பிட்காயின் மோசடி வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

வேரியபிள் டெக் நிறுவனம் பெரும் மோசடியை நிகழ்த்தி வருவதாக புகார்கள் வந்ததையடுத்து டெல்லி மற்றும் மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த நிறுவனத்தை நடத்தி வந்த அமீத் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ் மற்றும் மகேந்திரா பரத்வாஜ், நிறுவனத்தின் ஏஜெண்டுகள் உள்ளிட்டோர் கடந்த 2017ம் ஆண்டு பிட்காயின் மூலமாக முதலீட்டாளர்களை மோசடி செய்து 6600 கோடியை சுருட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்குகளின் அடிப்படையில் பண மோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான 285 பிட்காயின்களை ராஜ் குந்த்ரா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி ஆகியோரின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேரியபிள் டெக் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றி, தவறான ஆன்லைன் வாலட்டுகளில் பிட்காயின்களை மறைத்து வைத்துள்ளனர். உக்ரைனில் பிட்காயின் மைனிங் அமைப்பதற்காக இந்த மோசடியின் மூளையாக விளங்கும் அமித் பரத்வாஜிடம் இருந்து 285 பிட்காயின்களைப் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.