வெற்றி அளிக்கக்கூடிய பயிர் செய்கையை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள முடியும் – வட மாகாண ஆளுநர்

“இந்த வருடத்தில் வெற்றி அளிக்கக்கூடிய பயிர் செய்கையை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள முடியும், இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண புதுவருட கொண்டாட்டம் வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்று முனிதினம் நடைபெற்ற போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெரிய குளங்கள் மற்றும் சிறு குளங்களின் நீர்மட்டம் போதுமானதாக காணப்படுகின்றமையால் இடைபோகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் போதுமான அளவு விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதன் ஊடாக நாங்கள் எங்களுடைய வறுமையிலிருந்து மீள்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் காணப்படுகிறது.

இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்திலும் குளங்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல வடக்கு மாகாணத்தில் காணப்படக்கூடிய 17 பாரிய குளங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான சிக்கலை நிவர்த்திக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய புதிய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. அதற்கமைய 32,000 பயனாளிகள் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்பட்டு காணி உறுதி பத்திரத்துடன் பயனாளர்களிடம் எதிர்வரும் ஒரு வருடத்திற்குள் கையளிக்கப்பட உள்ளன.

இதேவேளை, மக்களிடையே கலைக்கலாசாரங்களை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்தவெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் கலாசார உத்தியோகஸ்தர்கள் புதிய அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும். கிராமங்களில் திறந்தவெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக தங்களுடைய தனித்துவமான கலை, கலாசாரங்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது அவா.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான தயார்படுத்தல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இது தொடர்பான இறுதி தீர்மானங்கள் வெகு விரைவில் எடுக்கப்பட உள்ளன.” என வடக்கு மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.