Bade Miyan Chote Miyan: ஆக்‌ஷன் படம்னாலும் ஒரு நியாயம் வேணாங்களா? சோதிக்கும் அக்‌ஷய் குமாரின் படம்!

அக்‌ஷய் குமார், டைகர் செராப், பிரித்விராஜ், சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிப்பில் சயின்ஸ் பிக்‌ஷன் ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது, `படே மியான் சோட்டே மியான்’.

இந்திய ராணுவத்தால் பாதுகாக்கப்படும் விவரங்கள் கொண்ட பெட்டியை முகமூடி போட்ட மனிதர் ஒருவர் ராணுவ வீரர்களைத் தாக்கிவிட்டு எடுத்துச் செல்கிறார். இந்த முகமூடி அணிந்தவரைப் பிடிப்பதற்கு சஸ்பெண்டு செய்யப்பட்ட இரண்டு ராணுவ வீரர்களை நியமிக்கிறார்கள். இந்த இரண்டு ராணுவ வீரர்கள் அந்த முகமூடி அணிந்த மர்ம நபரைக் கண்டுபிடித்தார்களா, அந்த முகமூடி அணிந்த நபர் யார், அவர் எதற்கு இப்படியான குற்றங்களை நிகழ்த்துகிறார் என்பதை விவரிப்பதே இந்தத் திரைப்படம்.

Bade Miyan Chote Miyan Review

ராணுவ வீரர்களாக திடமான உடல்மொழியில் அக்‌ஷய் குமாரும் டைகர் செராப்பும் மிரட்டுகிறார்கள். இதுமட்டுமின்றி, இந்தக் கதாபாத்திர தன்மைக்குச் சரியாக பொருந்தி ஸ்கோர் மீட்டரின் உச்சத்தில் நிற்கிறார்கள். வில்லனாகக் களமிறங்கியிருக்கும் நடிகர் பிரித்விராஜ் ஆக்ரோஷமாக நடித்து மிரட்டியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு இப்படியான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. நடிகை மனுஷி சில்லார் டீசன்ட்டான நடிப்பை வழங்கியதோடு பல சாகசங்களையும் நிகழ்த்துகிறார். நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் கதாபாத்திரம் குறித்தான பின்னணியை முழுமையாக விவரிக்காமல் திடீரென கொண்டு வருவது அந்தக் கதாபாத்திரத்தை அந்நியமாக்கிவிடுகிறது.

ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய அதே பழங்கால ஃபார்மேட்டிலேயே இப்படத்தைப் பொருத்தி எடுத்திருக்கிறார் இயக்குநர் அலி அபாஸ் ஜாபர். ஆக்‌ஷன் மட்டுமே பிரதானம் என்பதை முடிவு செய்துவிட்டு அடுத்தகட்ட வேலைகளைக் கவனித்திருப்பார்கள் போல! முழுக்க முழுக்க ஒரு காட்சி விடாமல் எல்லாவற்றிலும் ஸ்டன்ட்களை வலுக்கட்டாயமாகச் சொருகியிருக்கிறார்கள். ஆக்‌ஷன்தான் படத்தைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. ஆனால், அந்த முயற்சிக்கு மற்ற விஷயங்கள் கை கொடுக்காததால் ஃபெயில் ஆகியிருக்கிறது.

Bade Miyan Chote Miyan Review

இப்படியான விஷயங்களைத் தாண்டி படத்தின் நீளமும் ஒரு மைனஸ். பல நீளமான படங்களைத் திரைக்கதையாசிரியர்கள் பல புதுமையான விஷயங்களை சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் அப்படியான சுவரஸ்யமான விஷயங்கள் எதுவுமே இல்லை. இந்த விஷயங்கள் இல்லாவிட்டாலும் படத்தில் அடுத்தடுத்து வரும் காட்சிகளைக் கணிக்க முடியாத அளவிலாவது அமைத்திருக்கலாம். இதனாலேயே மொத்த ஸ்க்ரிப்ட்டும் Chat GPT-யிடம் கொடுத்து வாங்கப்பட்டதாக பல்லிளிக்கிறது.

படத்தில் அமைந்துள்ள பல தேசபற்று வசனங்களும் எந்த உணர்வையும் தூண்டாமல் கிரின்ஞ் ஏரியாவிலேயே வட்டமடிக்கின்றன. `Nepotism is also in terrorism’ என்பது போன்ற சில நையாண்டி வசனங்கள் ஓர் ஆறுதல். ஆனால், இந்த வசனத்தை டைகர் செராப் பேசுவதுதான் கூடுதல் காமெடி! இப்படியான விஷயங்களைக் கடந்து செல்கையில் பல லாஜிக் மீறல்களும் எட்டிப் பார்க்கின்றன.

இதையெல்லாம் தாண்டி படத்தின் தொழில்நுட்ப ஏரியாவிலும் ஒரு சில இடங்களைத் தவிர மற்றதில் சிக்கல்தான். நிலத்தின் வெப்பத்தைக் கடத்தும் வகையில் லைட்டிங் அமைத்திருப்பது சிறப்பு. கதாநாயகன் நிகழ்த்தும் ஆக்‌ஷன் காட்சிகளை கேமராவோடு பறந்து பறந்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மார்சின். களைப்பை உண்டாக்கும் காட்சிகளை படத்தொகுப்பாளர் ஸ்டீபன் பெர்னார்டு இன்னும் நுட்பமாகக் கையாண்டிருக்கலாம். படத்தின் முக்கிய அங்கமாக வரும் க்ளோனிங் காட்சிகளின் கிராபிக்ஸை இன்னுமே மேம்படுத்தியிருக்கலாம்.

Bade Miyan Chote Miyan Review

பொதுவாகக் காட்சிகளின் வலுவுக்கு ஏற்ப பின்னணி இசைதான் அமையாமல் போகும். ஆனால் இந்தப் படத்தில் நேர் எதிராக பின்னணி இசை அதிரடியாக இருந்தாலும் அதற்கேற்ப வலுவான காட்சிகள் படத்தில் இல்லை. பாடல்கள் மட்டும் வைப் மீட்டருக்கு ஏற்றவாறு உருவாகியுள்ளதால் படத்தின் நீளத்தையும் தாண்டி ரசிக்க வைக்கின்றன.

படத்தின் அத்தனை அம்சங்களிலும் புதுமை என்பதே இல்லாததால் இந்த `படே மியான் சோட்டே மியான்’ வெற்றி கொடி நாட்டவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.