கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கமா? – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: கோவை மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமானவாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடந்துவந்தது. அப்போது, வாக்களிக்க வந்த பலரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை, அங்குவந்து, வாக்காளர்களின் பெயர்இல்லாதது குறித்து அங்கு இருந்தவர்களிடம் கேட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கோவை மக்களவை தொகுதியில் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளியில் ஒரே வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சுமார்1,353 வாக்குகள் உள்ள இடத்தில் 70 சதவீதம் அளவுக்கு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 20 பெயர்கள் இல்லை. உயிரிழந்த கணவருக்கு வாக்கு உள்ளது. ஆனால், உயிரோடு இருக்கும் மனைவிக்கு வாக்கு இல்லை. கோவையில் கடந்த 40 ஆண்டுகளாக வாக்களித்து வந்தவருக்கு வாக்குரிமைமறுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.

பல்லடம், சூலூர் என பல இடங்களில் பாரம்பரியமாக பாஜகவுக்கு வாக்கு செலுத்தி வருபவர்களுக்கு நிறைய இடங்களில் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பெரிய அளவில் திட்டமிட்டு கோவையில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர்களை இவ்வாறு நீக்கிஉள்ளனர். இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.

உடனடியாக இதுதொடர்பான தரவுகளை சேகரித்து ஆவணமாக தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளருக்கு அளித்து வருகிறோம். இதை எல்லாம் தொகுத்து மனுவாக அளிக்க உள்ளோம். அந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரியுள்ளோம். தேர்தல் அதிகாரிகள் என்ன வேலைசெய்தனர் என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் கேட்டபோது, ‘‘இது தனிப்பட்ட புகார். இதுதொடர்பாக ஆய்வு செய்தால்தான் தெரியும். இதுபோன்ற புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள்தான் கவனிப்பார்கள்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.