சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு: காவல் ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு செய்தார். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: நேற்று (ஏப்.19) தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆயுதங்கள் ஏந்திய காவல் துறையினர் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர்கள் மேற்பார்வையில், இணை ஆணையர்கள் கண்காணிப்பில், துணை ஆணையர்கள் தலைமையில் மேற்படி 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதல் அடுக்கில் மத்திய ஆயுத காவல் படையினரும் (CAPF), 2-வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் (Tamilnadu Special Police), 3-வது அடுக்கில் சென்னை பெருநகர ஆயுதப்படையினரும் (Armed Reserve), 4-வது அடுக்கில் சென்னை பெருநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஏப்.20) காலை ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லூரி ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். மேலும், அங்கு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்து மேற்படி வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிவுரைகள் வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.