Ghilli: `இது ரி-ரிலீஸா, புது ரிலீஸா?' – 20 வருடங்களுக்குப் பிறகு எப்படியிருக்கிறது இந்த `கில்லி'?!

தமிழ் சினிமாவில் இது ரீ-ரிலிஸ் சீசன். சமீபமாக க்ளாசிக் படங்கள் பலவும் மீண்டும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அவ்வாறு சில படங்கள் வந்ததிலிருந்தே `கில்லி’ மீண்டும் திரைக்கு வந்தால் எப்படியிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. அதனைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இன்று வெளியானது கில்லி. 20 வருடங்களுக்கு முன்னர் இதே ஏப்ரல் மாதம் 17-ம் தேதி வெளியான `கில்லி’, தற்போது ஏப்ரல் 20-ல் வெளியாகியிருக்கிறது.

கில்லி

ஞாயிற்றுக் கிழமை வந்தாலே ரிமோட்டும் கையுமாக டிவியின் முன்னால் உட்கார்ந்து ‘டாப் 10’ நிகழ்ச்சியில் எந்தப் படம் நம்பர் 1 வாங்குகிறது என்று பார்த்துக்கொண்டிருந்த காலம்… இன்று எப்படியான ஹிட் படமானாலும் 2 வாரங்களில் காணாமல் போக, வாரங்கள் அல்ல மாதங்கள் கடந்தும், எந்தப் படம் வந்தாலும் சொல்லி அடித்தது ‘கில்லி’. ‘அப்படிப் போடு’ பாட்டு அன்றைய நோக்கியாவின் பட்டன் போன்களில் ரிங்டோனாக அலங்கரிக்க, ஆடலும் பாடலும் திருவிழாக்களில் எல்லாம் இறுதி பாட்டாகப் போடப்பட்டு ஊரே ஆடிய காலமது.

கில்லி

இப்படி ஒவ்வொருவருக்கும் எக்கச்சக்க நினைவுகளை வழங்கி, இரண்டு தலைமுறைகளாக, இன்று மீம் டெம்ளேட் வரை நம் வாழ்வியலோடு கலந்துவிட்டது ‘கில்லி’. இப்போதும் விழாக்கால விடுமுறை நாள்களில் குடும்பங்களோடு டிவி முன்னால் உட்கார வைக்கும் டி.ஆர்.பி கிங்கான ‘கில்லி’ இன்று ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. ‘கில்லி’ படத்துக்குக் கூட்டிச் செல்ல அன்று அப்பாவை நச்சரித்து எப்படியோ தியேட்டரில் படத்தைப் பார்த்த 90-களின் குழந்தையான என்னை மீண்டும் அந்த நாளுக்குக் கூட்டிச் சென்றது இந்த அனுபவம். எப்படியிருந்தது இந்த ரீ-வாட்ச் எக்ஸ்பீரியன்ஸ் என்பதைக் கொஞ்சம் நாஸ்டலாஜியாவோடு சேர்த்துப் பார்ப்போம் வாங்க…

வீட்டிலிருக்கும் சிறியவர் தொடங்கி பெரியவர் வரை விஜய்யை எல்லோரிடமும் கொண்டு சேர்த்த படங்களில் முக்கியமானது ‘கில்லி’. அதுவரையில் காதல், சென்டிமென்ட் போன்ற ஏரியாக்களில் மட்டும் கபடி ஆடி குடும்பங்களைக் கவர்ந்து வந்த விஜய், ‘திருமலை’யில் மாஸ் ஆக்ஷன் அவதாரம் தரிக்க, அதற்கு அடுத்து வந்த கில்லி அந்த அவதாரத்துக்கு மகுடம் சூட்டியது. அன்றைய இளைய தளபதி இன்றைய தளபதியாக மாறிவிட்டார், ஆனால் இன்றைய டைட்டில் கார்டில் அந்தப் பழைய பட்டத்தைப் பார்த்ததில் ஆரம்பித்த ரசிகர்களின் விசில் ரெய்டுடன் படம் முடியும் வரை “கபடி கபடி” என தம் கட்டி ஆர்ப்பரித்தது.

கில்லி

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ கதாபாத்திரங்களின் எப்போதும் இந்த வேங்கை ‘வேலு’க்கு தனி இடம் உண்டு. அதை நிரூபிக்கும் விதமாக விஜய்யின் இன்ட்ரோ’ தொடங்கி இன்ட்ரோ பாடலான ‘சூர தேங்க அட்ரா அட்ரா’ பாடல் வரை தேங்காயைச் சிதறடிப்பது போல திரைமுன் வந்து குத்தாட்டம் போட்டு வரவேற்றனர். அதுவும் “கணேசனா கரணம் போடு” என்ற வரிகள் வந்தவுடன் “ஐயப்பண்ணா சரணம் போடு” என்று வித்யாசாகர் கான்சர்ட் நிகழ்ச்சி போல மாறி மாறி கத்தினார்கள் ரசிகர்கள்.

கில்லி

“எப்பூ உங்களுக்கு வேணா அவுக குந்தவை மகாராணியா இருக்கலாம்… எங்களுக்கு எப்பவும் அவுக எங்க காரப்பொரி தனலட்சுமி தாம்லே” என்று 90ஸ் கிட்ஸ் “ஷாலலா ஷாலலா”வை கொண்டாடித் தீர்த்தனர். ஃபேவரைட் ஹீரோ எல்லாருக்கும் உண்டு, ஆனால் ஃபேவரைட் வில்லனும் எங்களுக்கு உண்டு என முத்துபாண்டியின் இன்ட்ரோவில் ‘லவ் யூ செல்லம்’ என கோரஸ் எழுப்பி பிரகாஷ்ராஜுக்கும் அன்பை வாரி இறைத்தனர்.

படத்தில் பல காட்சிகள் இப்போதும் எல்லோருடைய ஃபேவரைட்! அதில் சில சீரியஸான காட்சிகளும் விதிவிலக்கல்ல. மதுரை மண்ணில் ‘கில்லி’ அணி காலெடுத்து வைக்க, தனலட்சுமி அண்ணனை முத்துப்பாண்டி ரயில் நிலையத்திலே கொலை செய்கிற காட்சியில் “டேய் ஜன்னல் சீட்டு அண்ணன் டா” என்று ஒருவர் கத்த, தியேட்டரில் கிச்சு கிச்சு. அதேபோல செமி பைனலில் தோற்ற பிறகு “விடுறா பைனல்ல பாத்துக்கலாம்” என விஜய் சொல்ல “அண்ணன் பிளே-ஆப் பத்தி சொல்றார்டா” என 20 வருட லாஜிக் பிரச்னையை ஜாலியாக தீர்த்து வைத்தனர்.

கில்லி

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிப் பல படங்கள் எடுக்கப்பட்டாலும் இன்றும், “பட்டப்பகலுல நட்ட நடு ரோட்டுல முத்துபாண்டியவே ஒருத்தன் அடிச்சுட்டான்னா, அவன் கண்டிப்பா இந்த ஊர்க்காரனா மட்டும் இருக்க முடியாது” என்று வசனத்துக்குப் பிறகு கரண்ட் கம்பியில் தீப்பொறி பறக்க விஜய் திமிறி நிற்கும் காட்சிக்கு என்றுமே தனி இடம்தான். அதை இந்த ரீ-ரிலீஸ் படத்திலும் நம்மால் உணர முடிந்தது. கோயில் கோபுரம் காட்டப்பட்ட இடத்திலிருந்து விசில் சத்தம் காதை பிளந்தது. “என்னைப் பொறுத்தவரை இறங்குனா ஜெயிக்கணும்”, “தம்மாத்தூண்டு பிளேடு மேல வச்ச நம்பிக்கைய உன்மேல வை” என்ற மாஸ் வசனங்களின் பவர் பன்ச் இன்றுவரை சலிக்கவில்லை

அன்றே தியேட்டரில் இந்தப் படத்தைக் கொண்டாடியவர்கள், பின்னர் சி.டி-யில் பார்த்தவர்கள், டிவியில் விளம்பரத்தின்போது கூட சேனலை மாற்றாமல் பலமுறை பார்த்தவர்கள் எனப் பலரும் திரையரங்கிலிருந்தாலும், இன்றுவரை யாருக்கும் சலிப்பைத் தராத வகையில் படத்தின் திரைக்கதை இருப்பது ஆச்சர்யம்தான். ‘ஒக்கடு’ என்கிற தெலுங்கு ரீமேக் படம் என்றாலும், தமிழின் திரைக்கதைக்காக எக்கச்சக்க உழைப்பினை போட்ட தரணியின் திரைக்கதைக்குக் கிடைத்த பெரும் விருது இது என்றே எனலாம்.

கில்லி

20 வருடங்களுக்குப் பிறகும் எழுந்த கைதட்டல்களும், சிரிப்பொலியும் “அந்த கத்திய என்கிட்ட குடு எப்படி குத்தணும் சொல்லி தர்ரேன்” என்ற ‘வேட்டையாடு விளையாடு’ கமல் போல, “மாஸ் கமர்ஷியல் படம் எப்படி எடுக்கணும்னு சொல்லித் தர்றேன்” என்று தரணி அப்போதே பாடம் நடத்திய உணர்வு. தெறிக்கும் இன்டர்வெல் பிளாக் ஒருபுறம் என்றால் மறுபுறம் “அர்ஜுனரு வில்லு” பாடலில் வரும் “ஓ ஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஹோ” என்ற ஹம்மிங்கை anthem-ஆக மாற்றி தியேட்டரை அலறவிட்டது ரசிகர் கூட்டம். “அப்படிப் போடு” பாடலின்போது யாரையும் சீட்டிலேயே பார்க்க முடியவில்லை.

எல்லோரும் தங்களை மறந்து ஆண், பெண், குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி ஆடி, பாடி கொண்டாடித் தீர்த்து ‘ஒன்ஸ் மோர்’ எல்லாம் கேட்டது திருவிழாக்கோலம். “ஹான்ச் பூஞ்ச்” என்ற பி.ஜி.எம், ‘கொக்கரக்கோ’ பாடல் என அனைத்து பாடல்களின்போதும் இதே நிலைதான். க்ளைமாக்ஸ் விஜய் – பிரகாஷ்ராஜ் மோதும் இடமெல்லாம் பண்டிகையா கொண்டாடுறாங்க ரகம்தான்.

கில்லி

20 வருடங்களுக்கு முன்னர் விகடன் விமர்சனத்தில் `சம்மர் கில்லி – ஜாலி’ என்ற வரியில் விமர்சனம் முடிந்தது. அந்த வரிகளுக்கு இன்றும் நியாயம் செய்வது போல நாஸ்டால்ஜியா குவியல்கள், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு போன்றவற்றுக்கு இடையே அதே சம்மர் ஜாலி ட்ரீட்டாக எகிறுகிறது இந்த `கில்லி’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.