The GOAT: விஜய்க்குக் கையில் மட்டுமல்ல, பின் தலையிலும் காயம் – ரஷ்யா படப்பிடிப்பில் நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், நேற்று வாக்களிக்க வந்த போது அவரது இடது கையில் காயம்… அதற்கான பேன்டேஜை கூட அவர் பிரிக்காமல் ஓட்டுப் போட வந்திருந்தது வைரலானது. அவருக்குக் கையில் காயம் எப்படி ஏற்பட்டது என அவரது ரசிகர்கள் நலம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

விஜய் இப்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, பிரஷாந்த், அஜ்மல், மீனாட்சி சௌத்ரி எனப் பலரும் நடித்து வருகிறார்கள். ‘கேப்டன் மில்லர்’ சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘விசில் போடு’ சிங்கிள் வெளியானது.

விஜய்

சில நாள்களுக்கு முன்னர் விஜய் உட்படப் படக்குழுவினர் ரஷ்யா பறந்தனர். அங்கே படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனிடையே நேற்று தேர்தல் என்பதால் வாக்களிப்பதற்காக சென்னை வந்தார் விஜய். அப்போதுதான் அவரது கையில் காயம் இருக்கும் விஷயம் வெளியே தெரிய வந்தது. இதுகுறித்து விஜய் வட்டாரத்தில் விசாரித்ததில்…

“ரஷ்யா படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் எடுத்து வருகிறார்கள். அதில் பைக் சேஸிங் சீன்கள் படமாக்கப்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் ஓட்டி வந்த பைக் விபத்துக்குள்ளாக, விஜய் கீழே விழுந்துவிட்டார் என்கிறார்கள். அந்த பைக் ஆக்ஸிடென்டால் விஜய்யின் கையில் மட்டுமல்லாது, பின் தலையிலும் கூட காயம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். உடனடியாக ரஷ்யாவில் உள்ள மருத்துவமனையில் விஜய்க்கு ட்ரீட்மென்ட் தரப்பட்டிருக்கிறது. அங்குள்ள மருத்துவர்கள் அவரை ஒருவாரம் ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வாக்களிப்பதற்காக அவர் சென்னை திரும்பியிருக்கிறார்.

ரஷ்யாவில் விஜய்

சில நாள்களுக்கு முன்னர் அவர் ரஷ்யாவிற்கு துபாய் வழியாகச் சென்றார். இப்போது துபாயில் பலத்த மழை, வெள்ளம் என்பதால் டெல்லி வழியாக சென்னை திரும்பியிருக்கிறார். தேர்தலுக்கு ஒரு நாள் முன்னர்தான் சென்னை திரும்பினார். பல மணிநேர விமான பயணம் என்பதால் ஓய்வில்லாமல் சோர்வாக அவர் இருந்தார் என்றும் சொல்கிறார்கள். சில நாள்கள் ஓய்விற்குப் பின், மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.