அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'ரத்னம்'. ஹரி இயக்கி உள்ள இந்த படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 26ம் தேதி வெளிவருகிறது.

படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடந்தது. இதில் விஷால் பேசியதாவது : இதற்கு முன்பு வெளிவந்த 'மார்க் ஆண்டனி' எனக்கு புதிய கதவைத் திறந்தது, 100 கோடி வசூலால் மரியாதை கிடைத்துள்ளது. அந்தப்படம் ஆதிக்கிற்கு ஒரு வாழ்க்கையை தந்துள்ளது. 'மார்க் ஆண்டனி'க்கு பிறகு, பழைய விஷாலை பார்க்க முடியவில்லை என்று சொன்னபோது, ஹரி சார் கூட படம் பண்ணலாம் என சொன்னார்கள். நானே அவருக்கு போன் பண்ணி நாம் படம் பண்ணலாம் என்றேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். மூன்றாவது படம் எனும்போது எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அவர் சொன்ன கதையை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது, உடனே இதைப் பண்ணலாம் என்றேன்.

ஹரி சார் என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு ஷாட் 5 நிமிடம் நினைத்தே பார்க்க முடியாது, என்னை ஆக்ஷன் ஹீரோ என சொல்லக் காரணமே கணல் கண்ணன்தான். எனக்கு 100 தையல் போடப்பட்டிருக்கிறது. அதற்கு பாதி காரணம் அவர் தான், அவர் அமைத்த காட்சி படத்தில் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும்.

நான் பேசுவது பிரச்சனையாகிறது என்கிறார்கள் ஆனால் நான் என் படத்திற்காக பேசவில்லை. எல்லோருக்காவும் போராடுகிறேன். சினிமாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது, சினிமா எல்லோருக்குமானது யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் இன்னொரு கொடியைத் தூக்கிக் கொண்டு அரசியலுக்கு வர வேண்டும். எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது அதை விட்டுட்டு நான் ஏன் அரசியலுக்கு போகனும்? அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.