தொலைக்காட்சி விவாதத்தின்போது பா.ஜ.க. தலைவர் மீது தாக்குதல்.. பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கம்

திகம்கர்:

மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் நகரில் தேசிய செய்தி தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நேற்று இரவு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விவாதித்தனர். விவாதத்தை நேரில் காண்பதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் வந்திருந்தனர்.

விவாதத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் பிற கட்சிகள் மீதான விமர்சனங்களை முன்வைத்ததால் விவாதம் பரபரப்பாக சென்றது. அப்போது, கூட்டத்தில் இருந்த இரண்டு நபர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராகவும், மோடியை கடுமையாக திட்டியும் முழக்கம் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. முழக்கம் எழுப்பிய நபர்களை பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட பொறுப்பாளர் பிரபுல் திவேதி தட்டிக்கேட்டு ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் உருவானது. இதில் பிரபுல் திவேதி தாக்கப்பட்டார்.

பிரபுல் திவேதி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபர் என்பவரை கைது செய்தனர். ஹிமன்ஷு திவாரி என்பவரை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஆனந்த் ராஜ் கூறுகையில், “விவாதம் நடைபெற்றபோது பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக ஹிமன்ஷு திவாரி, பாபர் ஆகியோர் ஆட்சேபனைக்குரிய வகையில் முழக்கம் எழுப்பினர். இதற்கு, பா.ஜ.க. ஊடக பிரிவு மாவட்ட பொறுப்பாளர் பிரபுல் திவேதி ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது இரண்டு நபர்களும் பிளாஸ்டிக் சேரை தூக்கி அவர் மீது வீசினர். சில உள்ளூர் தலைவர்கள் தலையிட்டு பிரபுல் திவேதியை பாதுகாக்க முயன்றனர். இதனால் கைகலப்பு உருவானது” என்றார்.

மோதலை தூண்டியவர்கள் காங்கிரசைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அவர்களுக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அவர்கள் பார்வையாளர்களாக வந்தவர்கள் என்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் சாஹூ தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த 13-ம் தேதி ஜபல்பூரில் நடந்த தேர்தல் விவாதத்தின்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. பிளாஸ்டிக் சேர்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.