சூரத் மக்களவை தொகுதியில் சூதாட்டம்; பா.ஜ.க. மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், மோடியின் அநியாய காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொண்டுள்ள வருத்தம் மற்றும் கோபம் ஆகியவை பா.ஜ.க.வை அச்சுறுத்தி உள்ளது.

அதனால், சூரத் மக்களவை தொகுதியில் அக்கட்சியினர் சூதாட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர் என குற்றச்சாட்டாக பதிவிட்டு உள்ளார். இந்த தொகுதியில், 1984-ம் ஆண்டு முதல் அவர்கள் வெற்றி பெற்று வந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த பதிவில், 3 சாட்சிகளின் கையெழுத்துகளை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட முரண்பாடுகளால், நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவை சூரத் மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். இதேபோன்ற காரணங்களால், சூரத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளர் சுரேஷ் பத்சாலாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

இதனால், காங்கிரஸ் கட்சி வேட்பாளரின்றி விடப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். மே 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2 வாரங்களுக்கு முன்பே, பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

நம்முடைய தேர்தல், நம்முடைய ஜனநாயகம், பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் சாசனம் என அனைத்தும் தலைமுறை சார்ந்த அச்சுறுத்தலில் உள்ளது. நம்முடைய வாழ்நாளில் மிக முக்கிய தேர்தல் இதுவாகும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.