நமக்குள்ளே… சந்தோஷக் கதைகள் மனம் நிறைய கிடைக்கட்டும்… நிறைய நிறைய!

கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்துவிட்டது. சுற்றுலா பயணங்கள் ஆரம்பித்துவிட்டன. உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு விருந்தினராகச் செல்லும் நாள்கள் ஆரம்பித்துவிட்டன. இப்படி, கோடையில் நடக்கும் பிரத்யேக விஷயங்கள் பல. அதனால்தான், மற்ற எல்லா மாதங்களையும்விட, கோடை மாதங்களின் கதைகள் நம் நினைவுகளின் சேகரிப்பில் எப்போதும் சற்று அதிகமாகவே இருக்கும்.

வெயில் என்பது, வியர்க்குரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், சூட்டுக் கொப்புளங்கள், அம்மை, நீரிழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் என உடலில் பல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, கொளுத்தும் வெயிலுக்கு எதிரான நம் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது குடை, தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வதில் ஆரம்பித்து, பகல் நேரத்தில் நீண்ட பயணங்களைத் தவிர்ப்பது வரை கவனத்தில் வைப்போம் ஒவ்வொன்றையும்.

விடுமுறையில், இன்று பெரும்பாலான குழந்தைகள் கேட்ஜெட்களிலேயே பொழுதைக் கழிக்கின்றனர். அல்லது, பெற்றோர்கள் அவர்களை சம்மர் கேம்ப்களில் தள்ளிவிடுகின்றனர். ஒன்றை யோசித்துப் பாருங்கள் தோழிகளே… நம் கோடைகள் கழிந்தது எப்படி? சலிக்கச் சலிக்க விளையாடி, புழுதி சட்டையுடன் வீடு திரும்பும்போது, உடல் முழுக்கச் சோர்விருந் தாலும், உள்ளம் முழுக்க உற்சாகம் நிரம்பியிருக்கும்தானே? அப்படியான கோடைகளைக் கொடுப்போம் நம் குழந்தைகளுக்கும். ஸ்கிரீனில் விரல்கள் மட்டுமே அசையும் ஆன்லைன் கேம்ஸில் இருந்து அவர்களைப் பிரித்து, உடலும், மனதும் ‘ஏய்… ஓய்…’ என்று ஆர்ப்பரித்து விளையாடவிடுவோம். பகலில் தாயம், பிசினஸ் கார்ட்ஸ் என்று இண்டோர் கேம்ஸ், மாலையில் பம்பரம், ஷட்டில் என அவுட்டோர் கேம்ஸ்களாக என, அவர்கள் கோடைக்கு வானவில் சேர்ப்போம்.

சுற்றுலா பயணங்களுக்கு பேருந்து, ரயில், கார், விமானம் என்று கிளம்பும்போது, டிக்கெட் முதல் பேக்கிங், தங்கவிருக்கும் ஹோட்டல் அறைகள் என எல்லா பயண ஏற்பாடுகளையும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துவிட்டால், ரிலாக்ஸ் ஆகி வருவதற்காகச் செல்லும் பயணங்களிலும் டென்ஷனை தவிர்க்கலாம்தானே தோழிகளே?

நம்மில் பலரும், நம் உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு விருந்தினர்களாகச் செல்லும் தினங்களும் இந்தக் கோடையின் காலண்டரில் உண்டு. அப்படிச் செல்லும்போது, ‘என் பையன் இதையெல்லாம் சாப்பிட மாட்டான்’, ‘நான் வெந்நீர் இல்லாமல் குளிக்க மாட்டேன்’ என்றெல்லாம், நம் வீட்டில் நாம் இருக்கும் அதே சொகுசையும், சௌகர்யத்தையும் அவர்கள் வீட்டிலும் எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டு வேலைகளிலோ, தியேட்டர், அவுட்டிங் போன்ற செலவுகளிலோ, நம்மால் இயன்ற பகிர்வை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இவையெல்லாம், அடுத்தமுறையும் அவர்கள் நம் வரவை விரும்பவைக்கும் நாகரிக செயல்பாடுகள்.

கோடை முடிந்த கையோடு, பெரும்பாலான வீடுகளிலும் காத்திருக்கும் செலவு… பிள்ளைகளின் பள்ளி, கல்லூரிக் கட்டணங்கள். அதற்கான ஏற்பாட்டை, இப்போதிருந்தே செய்யத் தொடங்கலாம். தேவையெனில், கோடையில் மற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டு, ஜூனுக்கு சேமிக்கலாம்.

`2024 கோடை லீவ்ல என்னாச்சு தெரியுமா…’ எனப் பகிர்வதற்கு சந்தோஷக் கதைகள் மனம் நிறைய கிடைக்கட்டும் தோழிகளே… நிறைய நிறைய!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.