மீனாட்சியம்மன் திருத்தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் வடம் பிடித்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 12 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடிப் பகுதிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை உடன் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

மீனாட்சியம்மன்

இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர்.

தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுப் பெரிய தேர் புறப்பட அதைத் தொடர்ந்து சிறிய தேரும் புறப்பட்டது.

சுவாமி – அம்மன் திருத்தேருக்கு முன், அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல அவற்றைத் தொடர்ந்து முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் சென்றன.

சுவாமி – அம்மனின் திருத்தேர், கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்தன.

மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான பக்தர்கள் சங்கு முழங்கியும், பல்வேறு வகையான இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி – சுந்தரேசுவரர் பதிகம் பாடியும், ஹர ஹர சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மீனாட்சித் தேரோட்டம்

தேரோட்டத்தைக் காண மதுரை மக்களும் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.