“தேசத்துக்காக மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது அம்மா” – பிரியங்கா காந்தி பதிலடி

பெங்களூரு: தேசத்துக்காக மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் தனது அம்மா என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் தெரிவித்தது.

“நாம் ஏன் ராமரை வணங்குகிறோம். நேர்மையான வழியில் பயணித்து அவர் மக்களுக்காக சேவை செய்தவர் என்பதால். மகாத்மா காந்தியும் அதே வழியை தேர்வு செய்து பயணித்தவர். அவரை துப்பாக்கி குண்டுகள் துளைத்த போதும் ‘ஹே ராம்’ என்று தான் சொன்னார்.

ஆனால், இன்று நிலையே வேறு. பொய்கள் எங்கும் நிறைந்துள்ளன. அன்றாடம் ஏதேனும் ஒரு நாடகம் அரங்கேறுவதை நாம் பார்த்து வருகிறோம். அனைத்து தவறுகளும் நம் கண் முன்னே நடக்கிறது. நாம் அமைதியாக இருக்கிறோம். மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்புகள் நசுக்கப்படுகின்றன. நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். நீங்கள் எப்போது போராட உள்ளீர்கள்.

அரசியலமைப்பை மாற்றி அமைப்பது குறித்து பேசி வருகிறார்கள். அதில் மாற்றம் நிகழ்ந்தால் என்ன நடக்கும்? மக்களின் உரிமைகள் பலவீனமாகும்.

கடந்த சில நாட்களாக உங்கள் வசம் உள்ள தங்கம் மற்றும் மாங்கல்யத்தை காங்கிரஸ் கட்சி பறிக்கும் என சொல்லப்பட்டு வருகிறது. தேசம் விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. யாரேனும் உங்களது தங்கத்தை அல்லது மாங்கல்யத்தை பறித்தார்களா.

போரின் போது தேசத்துக்காக தனது தங்கத்தை கொடுத்தவர் இந்திரா காந்தி. மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது அம்மா.

பெண்களின் போராட்டத்தை பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது. அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார். தேர்தலில் வாக்கு பெறுவதற்காக இப்படி பேசுகிறார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் அழைத்து செல்லப்பட்ட அவலம் குறித்து எதுவும் பேசாமல் இருந்தவர் தானே அவர்” என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

முன்னதாக, “மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெண்களின் தாலிச் செயின்கள் மீதும் கண்வைப்பார்கள். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதன்மூலம் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பங்கள் சொத்துகளை குவித்தன.

தற்போது நாட்டு மக்களின் சொத்துகள் மீதும் காங்கிரஸ் கண் வைத்திருக்கிறது. அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துகள், வீடுகள் அபகரிக்கப்படும். கொள்ளையடிப்பதை தங்களின் பிறப்புரிமையாக அந்த கட்சி கருதுகிறது” என தனது தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.