நாடு முழுவதும் வெப்ப அலை: டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை

புதுடெல்லி: நாடு முழுவதும் வீசி வரும் வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

நாட்டில் மக்களவை தேர்தல்7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்னும்6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கடும் வெப்பம் தாக்கி வருகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் வரும் 26- ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் அங்கும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி வரை உயர் வெப்பநிலை எச்சரிக்கை, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டெல்லி, வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசாவிலும் கடும் வெயில் இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் கடும் வெயிலின் தாக்கம் இருப்பது தொடர்பாகவும், அதை சமாளிப்பது தொடர்பாகவும் நேற்று டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து, இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், சுகாதார அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடுமையான வெப்பம் தாக்கும் என்பதால் வாக்குப்பதிவு, பிரச்சார நடைமுறைகளில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து அதிகாரிகள் விவாதித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றுதேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.