நாட்டை உடைக்க முயற்சி; காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

ராய்ப்பூர்,

நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள தேர்தல் நடைபெறும்.

சத்தீஷ்காரில் 3 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதில், ஒரு மக்களவை தொகுதிக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்து முடிந்தது. மீதமுள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு வருகிற 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இந்த தேர்தலை முன்னிட்டு ஜன்ச்கீர்-சம்பா பகுதியில் பா.ஜ.க. சார்பில் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, காங்கிரசை கடுமையாக சாடி பேசினார். திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியல் ஆகியன காங்கிரஸ் கட்சியின் மரபணுவில் உள்ளன என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, உங்களுடைய ஆசீர்வாதங்களை பெறுவதற்காக நான் வந்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நாடு நீண்ட தொலைவை கடந்து வந்துள்ளது. ஆனால், இன்னும் நிறைய பணிகள் உள்ளன.

சத்தீஷ்காரில் இருந்த முந்தின அரசு வளர்ச்சிக்கான பணியை செய்ய என்னை விடவில்லை. முதல்-மந்திரியாக தற்போது விஷ்ணு தியோசாய் நம்மிடம் உள்ளார். அதனால், அந்த பணிகளை நான் செய்து முடிக்க வேண்டும் என்று பேசினார்.

நடப்பு ஆண்டு பிப்ரவரியில், காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் பேசும்போது, மத்திய அரசிடம் இருந்து தென்மாநிலங்களுக்கு போதிய நிதி கிடைக்கவில்லை என்றால், தனிநாடு கேட்பதற்கான சாத்தியம் உள்ளது என்று பேசினார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், தெற்கு கோவா தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் கேப்டன் விரியட்டோ பெர்னாண்டஸ் கூறும்போது, 1961-ல் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவா சுதந்திரம் பெற்ற பின்னர், கோவா மக்கள் மீது இந்திய அரசியல் சாசனம் திணிக்கப்பட்டது என்று பேசினார்.

இந்த இரண்டு விசயங்களையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசும்போது, காங்கிரஸ் ஒரு பெரிய விளையாட்டை தொடங்கியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. தென்னிந்தியா தனிநாடாக அறிவிக்கப்படும் என கூறுகிறார். காங்கிரஸ் வேட்பாளரோ கோவாவில் அரசியல் சாசனம் திணிக்கப்பட்டது என கூறுகிறார்.

இதனை அவர் காங்கிரசின் இளவரசரிடமும் (ராகுல் காந்தி) கூறியிருக்கிறார். இதற்கு அந்த தலைவர் அமைதியான ஒப்புதலையும் அளித்திருக்கிறார். இது நாட்டை உடைப்பதற்கான தெளிவான செயல் ஆகும். இந்திய அரசியல் சாசனம் மற்றும் பாபா சாகேப் அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும் என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.