DC vs GT: மடக்கி தட்டு `பண்ட்', கில்லர் மில்லர், கில்லின் தவறு; கடைசி பந்தில் டெல்லி த்ரில் வெற்றி!

“எப்பா தம்பி அந்த கால்குலேட்டர எடு” என்று புள்ளிப் பட்டியலைப் பார்த்து, நாம் எத்தனை போட்டியில் ஜெயிக்க வேண்டும், மற்ற அணிகள் யார் யாரிடம் தோற்க வேண்டும் என ஒவ்வொரு அணி ரசிகர்களும் பார்த்துக் கொள்ளும் தருணத்தை இந்த ஐபிஎல் சீசன் எட்டியிருக்கிறது. இந்த நிலையில் புள்ளிப் பட்டியலில் 6வது மற்றும் 8வது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் புது டெல்லியிலுள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

DC vs GT

ஒமர்சாய் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலே ப்ரித்வி ஷா பவுண்டரியுடன் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க, தன் பங்குக்கு பிரேசர் மெக்குர்க்கும் ஒரு பவுண்ட்டரியைத் தட்ட10 ரன்கள் சேர்க்கப்பட்டது. அடுத்த வாரியார் வீசிய இரண்டாவது ஓவரில் ஆட்டத்தின் முதல் சிக்ஸரை ஸ்கொயர் லெக் திசையில் பறக்கவிட்ட பிரேசர், அடுத்த பந்தை ஃபோருக்கு விரட்டினார். மிகவும் ஜாலியாக பந்தின் வேகத்தையும் ரிஸ்ட்டையும் (மணிக்கட்டை) பயன்படுத்தி பவண்டரி எல்லையை காலி செய்து கொண்டிருந்த பிரேசரை 23 (14), தூக்கி அடிக்கும் ஆசையைத் தூண்டி ஸ்லோ பந்தில் காலிசெய்தார் சந்தீப் வாரியார்.

பிரேசர் மெக்குர்க்

அதே ஓவரில் ப்ரித்வி ஷாவும் 11(7) தூக்கி அடிக்க, நூர் ஒரு சிறப்பான டைவிங் கேட்சினைப் பிடித்து அவரை வெளியேற்றினார். அடுத்து வந்த ஷாய் ஹோப்பும் “நானும் ஒரு கஷ்டமான கேட்ச் தருகிறேன் எங்க புடி பாப்போம்” என்பது போல தூக்கி அடித்து ரஷீத் கானிடம் பிடிபட்டார். இப்படி பவர்பிளேயை கேட்ச் பயிற்சி நேரமாக மாற்றி மூன்று விக்கெட்களை வீழ்த்தினார் சந்தீப் வாரியர். இதனால் 6 ஓவர் முடிவில் 44-3 என்ற பரிதாபமான நிலையை எட்டியது டெல்லி.

அடுத்து அக்சர் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ரிஷப் பண்ட். நிதானத்தை கடைபிடித்த இருவரும் மோசமான பந்தை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி ‘விரலுக்கேத்த வீக்கமாக’ பந்துக்கு ஏற்ற ரன்களைச் சேர்த்தனர். இதனால் 10 ஓவர் முடிவில் 80-3 என்ற நிலைக்கு வந்தது. நூரின் 11வது ஓவரில் பண்ட் கீரிஸைத் தாண்டி டான்ஸ் ஆடி பாலினை மிஸ் செய்ய, விக்கெட் கீப்பர் சாஹா அந்த ஸ்டம்பிங் வாய்ப்பைத் தவறவிட்டார். அதற்கு தண்டனை கொடுப்பது போல அடுத்த பந்திலே மிட் விக்கெட் திசையில் வாணவேடிக்கையை நிகழ்த்தினார் பண்ட். பள்ளத்தில் விழுந்த சுபாஷினை மெதுவாக மேலே கொண்டு வரும் குட்டனைப் போல இந்தக் கூட்டணி, பள்ளத்திலிருந்த ரன்ரேட்டினை கவனமாக முன்னேற்றியது. அதன் பலனாக 12வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது DC.

DC vs GT

குஜராத் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்க பெரிதாக வாய்ப்பை உருவாக்காவிட்டாலும், பவுண்டரி போகும் வேகத்தினை ஓரளவுக்குக் குறைத்தனர். 13 – 15 ஓவர்களில் மூன்று பவுண்டரிகளே மட்டுமே கொடுத்தனர். இந்த நிலையில் அக்ஷர் பட்டேல் 37 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 15 ஓவர் முடிவில் 127-3 என்ற நிலையை எட்டியது DC. கையில் 7 விக்கெட் மிச்சம் இருக்கும் நிலையில், மோஹித் ஷர்மா வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து பறக்க விட்ட பண்ட், அதே ஓவரின் கடைசி பந்தில் லாங் ஆப் திசையில் மற்றொரு ஏவுகணையை இறக்கினார்.

DC vs GT

பாட்னர்ஷிப் 100 ரன்களைக் கடக்க அடுத்த ஓவரில் “ஏடா லூஸ் விட்டு அடிக்கடா” என்பது போல இரண்டு இமாலய சிக்ஸரைப் பறக்க விட்டார் அக்ஷர் படேல். 43 பந்துகளில் 66 ரன்கள் அடித்த அக்ஷர், நூரின் பந்தில் சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற அதை சட்டைசெய்யமல் மோஹித் ஷர்மாவின் அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை 55 (35) பூர்த்தி செய்தார் ரிஷப் பண்ட. இரண்டு ஓவர்கள் மிச்சம் இருக்க 171-4 என்ற நிலையை எட்டியது டெல்லி அணி.

200 ரன்களைத் தாண்டுவார்களா டெல்லி என்ற எதிர்பார்ப்பு வர, யாரும் எதிர்பாராத விதமாக 19வது ஓவரை ஸ்பின்னர் சாய் கிஷோரிடம் ஒப்படைத்தார் கில். “குண்டூர் காரம் பறக்கவிடப் போறோம்” என்பது போல 4, 6, 6, 4 என அடித்து துவம்சம் செய்தார் ஸ்டப்ஸ். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரை மோஹித் சர்மா வீச, “பறந்துட்டே அடிப்பேன், ஓடி போய் அடிப்பேன், படுத்துட்டே அடிப்பேன் பாக்குறியா பாக்குறியா…” என மடக்கி தட்டு மோடினை ஆன் செய்த பண்ட் 6, 4, 6, 6, 6 என தன் பங்குக்கு ஒரு மெகா போஸ்டல் பின்கோடினை போட்டு வாணவேடிக்கை காட்டினார். அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் வந்தன. இப்படி பண்ட் 88 (43), ஸ்டப்ஸ் 26 (7) கூட்டணி கிரவுண்டின் நாலாபுறமும் பந்தினைப் பறக்க விட 225 ரன்களை GTக்கு வெற்றிக்கான இலக்காக நிர்ணயம் செய்தது. 3-15 என்று மிரட்டலாகப் பந்து வீசியிருந்த சந்தீப் வாரியருக்கு ஏன் 4வது ஓவர் தரப்படவில்லை என்பது கேப்டன் கில்லுக்கே வெளிச்சம்.

DC vs GT

இமாலய இலக்கை நோக்கி தொடக்க ஆட்டகாரர்களான கில், சாஹா களத்துக்குள் வந்தனர். “எங்கிட்டயும் சீப்பு இருக்கு… நாங்களும் மொத பால்ல ஃபோர் அடிப்போம்” என அற்புதமான டிரைவ் ஷாட்டோடு இன்னிங்கிஸை தொடங்கினார் சாஹா. இந்த சீசனில் பெரிதாக சோபிக்காத கில், நார்கியாவின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து, “பிரின்ஸ் மீண்டு வருகிறார்” என்ற ஆசையைத் தந்தவர், அதே ஓவரில் அக்ஷர் படேலிடம் கேட்ச் கொடுத்து ‘பிரின்ஸ் படம்’ போல 6 (5) சொதப்பலாகி வெளியேறினார். அடுத்து வந்த சாய் சுதர்சன் தேர்ட் மென் திசையில் சிக்ஸருடன் ஆட்டத்தைத் தொடங்கினார். இவருடன் ஜோடி சேர்ந்த சாஹா “ஆன் வன்டாப்ல வன்ட்டாப்ல” என்று சொல்வது போல பவர்பிளேயில் பவராக வெளுத்து கட்டினார். இதனால் பவர்பிளேயின் முடிவில் 67-1 என்ற நிலையை GT எட்டியது. இதற்கு நடுவில் சாய் சுதர்சன் 17 ரன்களில் இருக்கும் போது தந்த எளிமையான கேட்ச்சினை அக்ஸர் படேல் தவறவிட்டார்.

பவர்பிளேவுக்குப் பிறகு ஸ்பின்னர்களை அடிக்க சாஹா திணறினாலும் அழகாக கேப் பார்த்து பவுண்டரிகளைப் பெற்று தந்து “கேப்பில் கிடாய் வெட்டினார்” சாய் சுதர்சன். 10வது ஓவர் முடியும் நிலையில் சாஹா 39 (25) குல்தீப் யாதவ் சூழலில் அக்ஷர் பட்டேலிடம் கேட்சாகி வெளியேறினார். அடுத்து வந்த ஓமர்சாய் 1 (2) வந்த வேகத்தில் அக்ஷர் படேல் சூழலில் பிரேசரிடம் கேட்ச் கொடுத்தார். இப்படி விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் அரைசதத்தை கடந்து நம்பிக்கை தந்த சாய் சுதர்சன், ரசிக் ஸலாம் ஓவரில் அக்ஷர் படேலிடம் கேட்சாக 127-4 என்ற நிலையை அடைந்தது குஜராத்.

DC vs GT

இந்த நிலையில் தமிழக வீரர் ஷாருக்கான் வந்த வேகத்தில் “ஜாவானுஹே!” என்று ஒரு சிக்ஸர் காட்டினாலும், சீக்கிரமாகவே ‘ஸிரோ’ பட ஷாருக்கான் போல ப்ளாப் ஆகி ரசிக் ஸலாம் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். வேகப்பந்து வீச்சாளரின் பந்தில் ஸ்டெம்புக்கு முன்னர் வந்து நிற்கும் பண்ட்டின் ஐடியாவுக்கு வெற்றி கிடைத்தது. அடுத்து வந்த குல்தீப் யாதவ் ராகுல் திவேதியாவின் 4(5) விக்கெட்டை எடுக்க, 152-6 என்ற நிலையை அடைந்தது GT. ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் நேர்மறையாக ஆடிவந்த டேவிட் மில்லர் “கில்லர் மில்லர் கேப்டன் மில்லர்” என பி.ஜி.எம் போட்டுக்கொண்டு நார்க்கியாவின் 17வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் விரட்டி 24 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஆக, 18 பந்துகளில் 49 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆட்டம் வந்தது. இந்த நிலையில் ரஷீத் கான் ரன் கணக்கைத் தொடங்காத நிலையில் தந்த ஈஸி கேட்ச்சினை போரேல் மிஸ் செய்தார்.

அதே நேரத்தில் ஆட்டத்தை முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மில்லர், முகேஷ் குமார் பந்தில் ரசிக் ஸாலமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆட்டத்தின் திருப்புமுனை இது. இதையடுத்து 12 பந்தில் 36 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலைக்குப் போட்டி வந்தது. இன்னும் இந்த ஆட்டத்தில் உயிர் இருக்கிறதா என்று கேள்விக்கு ரஷீத் கான் ஒரு ஃபோரினை அடித்து மெல்லமாகப் பதில் சொல்ல, சாய் கிஷோர் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அந்த ஓவரில் 18 ரன்கள் சேர்த்து “உயிர் இருக்கிறது” என்று கத்தினார். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் ரசிக் ஸலாம் யார்க்கர் வீச, சாய் கிஷோர் ஸ்டெம்புகள் பறக்க வெளியேறினார்.

DC vs GT

கடைசி ஓவர் 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை முகேஷ் குமார் கையில் பந்து வந்தது. முதல் இரண்டு பந்துகளில் 2 ஃபோர்களை அடித்து 4 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார் ரஷீத் கான். 3வது, 4வது பந்தில் ரன் எதுவும் கிடைக்காத நிலையில் கடைசி இரண்டு பந்தில் 11 ரன்கள் தேவை என்ற த்ரில்லருக்கு சென்றது ஆட்டம். 5வது பந்தில் வைட் யார்கரை கணித்த ரஷீத் கான் சிக்ஸர் வெளுக்க, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்று நகம் கடிக்கும் பரபரப்பான நிலைக்கு வந்தது போட்டி.

DC vs GT

இரண்டு அணி ரசிகர்களும் இஷ்ட தெய்வத்தை வேண்டி நிற்க, முகேஷ் குமார் யார்க்கரை மிஸ் செய்ய, அதை ரஷீத் கானும் பேட்டின் மிடிலில் கனெக்ட் செய்ய மிஸ் செய்தார். இதனால் வெறும் 1 ரன் மட்டுமே கிடைக்க, 4 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இதற்கெல்லாம் மத்தியில் குஜராத்தின் வெற்றியை பறித்த மற்றொருவரும் இருக்கிறார், அவர் சிக்ஸர் செல்லவிருந்த பந்தினைத் துள்ளி குதித்து தடுத்த ஸ்டப்ஸ்தான். அவர் தடுத்த ரன்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டன. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது DC. ஆட்டநாயகன் விருதினை ரிஷப் பண்ட் பெற்றுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.