அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், கடந்த 2019ம் ஆண்டு, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கிவந்த, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயிற்சி முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 300க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இந்திய எல்லைக்குள், பாகிஸ்தான் விமானப்படையின் எப்16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது இந்திய விமானப்படையின் மிக்21 ரக விமானம், பாகிஸ்தான் பகுதி கிராமத்தில் விழுந்தது. அதிலிருந்த போர் விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து, 'ரண்ணீதி: பாலகோட் அண்ட் பியாண்ட்' என்ற பெயரில் வெப் தொடர் உருவாகியுள்ளது. சந்தோஷ் சிங் இயக்கியுள்ள இதில், ஜிம்மி ஷெர்கில், அஷுதோஷ் ராணா, ஆசிஷ் வித்யார்த்தி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜியோ சினிமாவில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. இதில் போர் விமானி அபிநந்தனாக, பிரசன்னா நடித்துள்ளார்.

இதுகுறித்து பிரசன்னா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிஜ சம்பவத்தின் அடிப்படையில் உருவான வெப் தொடரில் நடித்ததில் மகிழ்ச்சி. அதோடு அபிநந்தன் கேரக்டரில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன். வெளியில் தெரிந்த செய்திகளை விடவும் தெரியாத உண்மைச் சம்பவங்களும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் எல்லையில் விழுந்த அபிநந்தன், ராணுவ ரகசியங்கள் கொண்ட ஆவணத்தை, வாயில்போட்டு விழுங்கி மறைத்தார். இந்தக் காட்சியைக் காஷ்மீரில் மைனஸ் 4 டிகிரி குளிரில் படமாக்கினார்கள். 4 நிமிட காட்சி அது.

ஆற்றுக்குள் விழுந்து எழுவது போன்ற அந்தக் காட்சியில் நடிக்கும்போது, உடலே மரத்துவிட்டது. உடனடியாக வெளியில் வந்து மூட்டப்பட்ட தீயினருகே அமர்ந்து சூடேற்றுவார்கள். இதை 8 டேக் வரை எடுத்தார்கள். நம் ராணுவ வீரர்களை நினைத்தே அந்தக் கடும் குளிரைத் தாங்கிக்கொண்டு நடித்தேன். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை நேரில் சந்தித்தபோது, உடல் சிலிர்த்தது. இந்த வெப் தொடர் கண்டிப்பாக ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.