ரங்கவல்லி காத்திருந்தாள்… ரெட்ரோ காதல் கதைகள் – 1

பார்த்ததும் புரொப்போஸ், பிரச்னை என்றால் பிரேக் அப் என்றிருக்கும் இன்றைய காதல்களுக்கு நேர் எதிரானவை 25 வருடங்களுக்கு முந்தைய காதல்கள். கண்களாலும், கடிதங்களாலுமே அன்பை வளர்த்தெடுத்த தலைமுறை அது. பள்ளிக்காலத்திலும், கல்லூரிக்காலத்திலும் அப்படி எத்தனையோ காதல்களைப் பார்த்திருப்போம். குறிப்பாக, அவற்றில் பெரும்பாலானவை கைகூடாத காதல்கள்தான். சில பிரிவுகள் காதல் போயின் சாதல் என்றும் முடிந்திருக்கும். அப்படிப்பட்ட சில காதல்களைத்தான் இந்த ‘ரெட்ரோ காதல் கதைகள்’ தொடரில் நீங்கள் வாசிக்கவிருக்கிறீர்கள்.

த்துமணி அலுவலகத்துக்கு 9.59-க்கு உள் நுழைந்து, சீட்டுக்குள் உடம்பை நுழைத்து, சிஸ்டமை ஆன் செய்ய, நேற்று சரியாக சைன் அவுட் ஆகாத சிஸ்டம், கடகடவென தன் விண்டோவை திறந்தது. முகநூல் நோட்டிஃபிகேஷன்களும் வந்துவிழ, ஒரு நோட்டிஃபிகேஷன் மட்டும் கண்களில்பட்ட அதே நொடியில் மூளையின் ஞாபக அடுக்குகளைத் திறந்தது. நான் படித்த பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்த அலுமினி மீட் நோட்டிஃபிகேஷன் அது. பதினேழு வயது சந்தோஷத்துடன் முகநூலைத் திறந்தேன். ‘மை காட்… பிளஸ் டூ முடித்து இருபது வருஷமாயிடுச்சா.., அப்போ என் வயசு’ என்று யோசித்தவள், ‘அச்சச்சோ கூட வேலைபார்க்கிற ஜூனியர் பயபுள்ளைக பார்த்துட்டா நம்ம வயசை கை விரல், கால் விரல் எல்லாத்தையும் விட்டு கூட்டிடுமே’ என்கிற உதறலில், முகநூலை மினிமைஸில் போட்டுவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். விரல்கள் மவுசை உருட்டிக்கொண்டே இருந்தாலும், மனம் என்னவோ அலுமினி மீட் இன்விடேஷனைத்தான் திரும்பத் திரும்ப புரட்டிக்கொண்டே இருந்தது. பாலாவும் ரங்குவும் வருவார்களா? கூடவே அவளும் வருவாளா..?

படித்தது ஒரு கோ எட் பள்ளிக்கூடத்தில். நானும் ரங்கவல்லியும் ஆரம்பத்தில் டெஸ்க்மேட்ஸ். அப்புறம் குளோஸ் ஃபிரெண்ட்ஸாகி, ரங்கவல்லி ரங்குவாகி… ‘ச் ச்சசா… மாசி மாசம்’ பாட்டை டெஸ்க்கில் தாளம் தட்டி, லாஸ்ட் பெஞ்ச் பையன்களையே மிரள வைத்திருக்கிறோம். மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என மூன்று முக்கியமான பாதாள பைரவிகளையும் கரைச்சுக் குடித்து ஜஸ்ட் லைக் தட் எண்பது சதவிகிதம் எடுத்து விடுவோம் என்பதால், டீச்சர்கள் எங்கள் சேட்டைகளையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

Retro love stories

பாலாவும் நானும் ஆறாம் வகுப்பிலிருந்தே ஒன்றாகப் படித்து வந்ததால், சுத்தமான போடா, போடி ஃபிரெண்ட்ஸ். பிளஸ் ஒன்னிலும் ஃபர்ஸ்ட் குரூப்பையே நாங்கள் தேர்ந்தெடுக்க, நட்பு தொடர்ந்தது. ஒரு நாள் பிசிக்ஸ் லேபில் ‘தனி ஊசலு’டன் போராடிக்கொண்டிருக்கையில், பாலா தயக்கமாக என்னருகே வந்தான். என்னடா என்று நிமிர்ந்து பார்த்ததும், ‘என் டெஸ்க் மேட் ஆறு மாசமா உன்னை லவ் பண்றானாம். உன்கிட்ட சொல்லச்சொல்லி ரொம்ப கெஞ்சறான்டி. அதான்… ‘என்று இழுத்தவனிடம், ‘மூதேவி, என் வீட்டைப் பத்தி நல்லா தெரிஞ்ச நீயே இப்படி தூது வந்தா எப்படி? காதல், கத்திரிக்கான்னு ஏதாவது பண்ணி வெச்சா படிப்பை நிறுத்திடுவாங்க, ஓடிப்போ’ என்று விரட்டிவிட்டேன். நான் எதிர்பார்த்ததுதான் என்கிற முகபாவனையோடு பாலா நகர, பக்கத்து டேபிளில் இருந்த ரங்கவல்லி ‘அந்தப் பையனை நானும் கவனிச்சிருக்கேன்டி. நல்லமாதிரியாத்தான் தெரியுறான்’ என்றவளிடம், ‘அப்போ, நீயே லவ் பண்ணிடேன்’ என்றேன். படக்கென்று வாயை மூடிக் கொண்டாள். இருக்காதா பின்னே… மேடம் ஆல்ரெடி இன் லவ். ஆள் வேறு யாருமல்ல. பாலா தான்.

ரங்கவல்லி… ஐடெக்ஸ் பல்லவி பொட்டு பாக்கெட்டில் இருக்கிற மாடல் பெண் ரங்கவல்லிதான் என்று சொன்னால், அவளை பற்றித் தெரியாதவர்கள் நம்பி விடுவார்கள். அவ்வளவு லட்சணம். பிசிக்ஸ் லேபிலும் கெமிஸ்ட்ரி லேபிலும் ஆல்பாபெட் வரிசைப்படி என் பக்கத்தில் உட்கார வேண்டிய கழுதை, ‘போர்டு தெரியலை, கிளார் அடிக்குது’ என்று விதவிதமாக காரணங்கள் சொல்லி விட்டு, முன்னாடிபோய் உட்கார ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் நானும் அவள் சொன்னதை நம்பி விட்டேன். ஒரு நாள் புதுப்பேனாவில் எழுத ஆரம்பித்தவள், நோட்டின் கடைசிப் பக்கத்தில் பாலா பாலா என்று கிறுக்க ஆரம்பிக்க, அவள் முன்னாடி முன்னாடி போய் உட்கார்ந்ததன் ரகசியம் புரிந்துவிட்டது எனக்கு. ரங்குவுக்கு ஏற்றவன்தான் பாலாவும். ரங்குவுக்காக பாலாவிடம் தூது போகவும் நான் ரெடியாகவே இருந்தேன். ஆனால், ரங்கவல்லி அதற்கு கடைசி வரைக்கும் ஒத்துக்கொள்ளவே இல்லை. கடைசி வரைக்கும் என்றால், நாங்கள் பிளஸ் டூ முடிக்கிற வரைக்கும். ‘பாலா மனசுல வேற ஏதாவது நெனப்பு வர்றதுக்கு முன்னாடி சொல்லிடுடி’ என்று நான் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும், ரங்கு தன் காதலை பாலாவிடம் சொல்ல மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தாள்.

பாலா மனதில் வேறு ஏதாவது நினைப்பு வருவதற்கு முன்னாடியே உன் காதலை சொல்லிவிடு என்று ரங்குவிடம் சொன்னேன் இல்லையா? அந்த நினைப்புக்குப் பெயர் ராதா. உடம்பு ஒடிந்து விழுந்துவிடுமோ என்கிற அளவுக்கு முழங்கால் தாண்டின முடி. அதற்காகவே அவளை பல பையன்கள் சைட் அடித்துக்கொண்டிருந்தார்கள். ‘ராதா மேல லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டுடி’ என்று பாலா என்னிடம் சொன்னபோது என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பாலா எப்படி எப்படியோ டிரை பண்ணிப்பார்த்தும் ராதா அசைந்தே கொடுக்கவில்லை. என்கிட்ட தூது ஹெல்ப் கேட்டவனை ‘மவனே ஓடிரு’ என்று விரட்டிவிட்டேன். அதன்பிறகு எங்களுடைய நட்பின் அடர்த்தி மெள்ள மெள்ள நீர்த்துப்போக ஆரம்பித்தது. ராதாவின் நட்பு வட்டத்தில் ஐக்கியமாக சீரியஸாக முயற்சி செய்துகொண்டிருந்தான் பாலா. இதையெல்லாம் தெரிந்துகொண்ட ரங்கவல்லி படிப்பில் தடுமாற ஆரம்பித்தாள்.

Retro love stories

இரண்டு வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. பிராக்டிக்கல் எக்ஸாமில் முழு மதிப்பெண்ணும் வாங்கிய சந்தோஷத்தில் ஃபேர்வெல் பார்ட்டிக்கு அரேன்ஜ் செய்தோம். ரங்கவல்லி, பாலா விஷயத்தில் கொஞ்சம்கூட மாறவே இல்லை என்பதால், பார்ட்டி முடிந்தவுடனே பாலாவிடம் ரங்கு பற்றி பேசியே ஆக வேண்டும் என மனதுக்குள்ளேயே முடிவெடுத்திருந்தேன். இதேமாதிரி பாலாவும் ராதாவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். எல்லாம் சில பொது நண்பர்களால் கிடைத்த செய்திதான். பாலா, தான் நினைத்தமாதிரியே ராதாவிடம் புரொபோஸ் செய்தான். பதில் சொல்லாமல் ராதா சென்றுவிட்டது சில விஷயங்களைச் சொல்லாமல் சொல்லியது எனக்கு. இருந்தாலும் ரங்குவுக்காக நான் பேச வேண்டும். ‘நீ சொல்றியா, நான் சொல்லவா’ என்று நான் பிடிவாதம் பிடிக்க, வேறு வழிதெரியாத ரங்கு என்னைக் கட்டிபிடித்து அழுதுகொண்டே அத்தனையும் சொன்னாள்.

ஒண்டுக்குடித்தன வீடு. தினமும் ராத்திரி மாமா வீட்டுக்குத்தான் தூங்கப்போவாளாம் ரங்கு. இந்த வாய்ப்பை மாமா பையன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். அவனும் எங்கள் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தான். பட், வேற டிபார்ட்மென்ட். ‘நடுராத்திரி உடம்புல ஏதோ ஊர்ற மாதிரி இருக்குன்னு திடுக்கிட்டா பார்த்தா, கண்ட இடத்துல தடவிட்டிருப்பான்டி. பகல்ல என் முகத்தை நிமிர்ந்துகூட பார்க்க மாட்டான். அம்மாகிட்ட சொல்றதுக்கும் பயமாயிருக்குடி’ன்னு கேவ ஆரம்பித்தவளின் முதுகைத் தடவி சமாதானம் மட்டும்தான் சொல்லத் தெரிந்தது அப்போது எனக்கு. இருபது வருடங்களுக்கு முன்னால் செக்ஸுவல் அப்யூஸ் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. கூடவே, இது வெளியே தெரிந்தால், நமக்குத்தான் அசிங்கம் என்று நம்பிக்கொண்டிருந்த அறியாமை வேறு.

அவ்வளவுதான், எல்லாம் முடிந்தது. பரீட்சையின் கடைசி நாள் ஆட்டோகிராப் நோட்டில் வீட்டு முகவரிகளை பரிமாறிக்கொண்டு, அவரவர் வாழ்க்கையைத் தேடிக்கொண்டு கிளம்பினோம். வீடு மாறும்போது, அந்த ஆட்டோகிராப் புத்தகம் செல்லரித்துப் போய் கிடைத்தது. ரங்குவையும் பாலாவையும் அந்த நிமிஷம்தான் நான் கடைசியாக நினைத்தேன் என்று நினைக்கிறேன். கல்யாணம், புருஷன், பிள்ளை, வேலை என்று வாழ்க்கை ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்துகொண்டிருக்கிற இந்த நேரத்தில்தான், இதோ… ஸ்கூல் அலுமினி மீட் இன்விடேஷன். ரங்கவல்லி வருவாளா, பாலா வருவானா, ராதாவும் வருவாளா? மனம் முழுக்க இவர்களின் ஞாபகங்கள்தான். ‘பாலா யாரை கல்யாணம் பண்ணியிருப்பான்’ என்று என் வீட்டுக்காரரைக் கேட்க, ‘இந்தக் கேள்வியை இன்னிக்கு மட்டும் எட்டாவது தடவையா கேட்கிறப்பா’ என்றார் சீரியஸாக. வேறு வழியே இல்லை. இன்னும் பத்து நாள் வெயிட் பண்ணித்தான் ஆக வேண்டும். லெட்ஸ் வெயிட். அந்த நாளும் வந்தது.

Retro love stories

ஒரே கலர் யூனிஃபார்மில் ஸ்டேட்டஸ் தெரியாமல் வளர்ந்தோம். இந்த அலுமினி மீட் எல்லோருடைய ஸ்டேட்டஸையும் எல்லோருக்கும் சொல்லிவிட்டது. கண்ணில்பட்டவர்களுக்கு ஹாய், ஹலோ சொல்லியபடி பாலாவைத் தேடினேன். முதுகுக்குப் பின்னாடியிருந்து ஒரு குரல்.

”’உன் பையன் ரொம்ப அழகா இருக்கான். உன் ஹஸ்பண்ட் மாதிரியா” என்றவனின் கையைப் பிடித்துகொண்டு ‘பாலா’ என்றபடி வெடித்துச் சிரித்தேன்.

”அப்படி உட்காரலாம் வா” என்றவன் சுவாதீனமாக என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். எங்கள் பின்னாடியே அவன் மனைவியும் மகளும். ‘உன்னை எங்களுக்கு நல்லா தெரியுமே’ என்ற பாவனையில் இருந்தன அவர்களுடைய முகங்கள். இருக்கை தேடி நான்கு பேரும் அமர்ந்தவுடன் ‘டீ குடிக்கலாம் வாங்க’ என்ற குரலுக்கு, ”நாங்க ரெண்டு பேரும் போய் எடுத்திட்டு வர்றோம். எவ்ளோ நாள் கழிச்சு ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கீங்க. பேசிட்டிருங்க” என்றபடி தாயும் மகளும் எழுந்துபோனார்கள். நான் பாலாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”ஏய்ய்… என்ன… உன் அதே பழைய ஃபிரெண்ட் தான். ”

”ரங்கவல்லியும், ராதாவும் வரலியா?”

”வந்திருந்தா பார்த்திருப்போமே… வரலைதான்போல. ஆமா, நீ ரங்கவல்லியைப் பார்க்கணும்னு ஆசைப்படுவே. ராதாவையுமா பார்க்கணும். அவளைத்தான் உனக்குப் பிடிக்காதே?”

”அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்ல”

”ரங்கவல்லிக்கு போட்டியா யார் வந்தாலும் உனக்குப் பிடிக்காது இல்லியா…”

”அப்போ, உனக்கு எல்லாம்… ?”

”தெரியும். உனக்குத் தெரிஞ்சுது, தெரியாதது, ஏன் ரங்கவல்லி உன்கிட்ட மறைச்சது எல்லாமே தெரியும்”

”என்கிட்ட மறைச்சாளா?”

”அன்னிக்கு நான் ராதாகிட்ட என் லவ்வை சொன்னது மட்டுந்தானே உனக்குத் தெரியும். அதுக்கப்புறம் ரங்கவல்லி என்கிட்ட அவ லவ்வை சொன்னது உனக்குத் தெரியுமா?”

”என்னது?”

‘ம்.. காதலிக்கிறேன்னு வார்த்தையா சொல்லலை. ‘நீ எப்பிடியும் என்னைப் புரிஞ்சுப்பேன்னு நம்பினேன்’னு சொன்னா. அவளோட அந்தப் பொறுக்கி மாமா பையன் என்கிட்ட ஒரு நாள் பேசினான். அவனுக்கு ரங்கவல்லி மனசுல நான் இருந்தது தெரிஞ்சிருக்கு. பச்… எனக்குத்தான். அந்த நேரத்துல நானும் ராதா ராதான்னு சுத்திட்டிருந்தேன். ரங்கவல்லி மனசுக்குள்ள நான் இருந்ததை தெரிஞ்சுக்காமலே போயிட்டேன். நீயாவது சொல்லியிருக்கலாமே” என்றவனை வலியுடன் நிமிர்ந்துப் பார்த்தேன்.

”உன்னைப் பார்க்கணும், ரங்கவல்லியைப் பார்க்கணும்னுதான் இந்த மீட்டுக்கே வந்தேன். உன்னை மட்டும்தான் பார்க்க முடிஞ்சது” – தான் கண் கலங்குவதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக தலையைக் குனிந்துகொண்டிருந்தான் பாலா.

”ராதா…?”

”ஒன் சைட் லவ்தானே. வேலை கிடைச்சதும் என் வீட்ல சொல்லி பொண்ணு கேட்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள அவளுக்கு கல்யாணமாகிடுச்சு”

Retro love stories

”உன் வொய்ஃபுக்கு இதெல்லாம்” என்ற என் கேள்விக்குள், மிசஸ் பாலாவின் குரல் இடையிட்டது.

”என்னங்க, உங்க ஃபிரெண்ட் அவரோட ரங்கவல்லி பத்தி பேச ஆரம்பிச்சிட்டாரா?”

”ரங்கவல்லி பத்தி சொல்லியிருக்கியாடா?”

”ம்”

குரலைத் தாழ்த்திக்கொண்டு ‘ராதா பத்தி’ என்றேன்.

‘இல்ல”

”ஏன்?”

”தெரியல”

ரொம்ப வருஷம் கழிச்சு என் மனதுக்குள் சொல்லத் தெரியாத இதம். பாலாவின் மனதில் என் ரங்கவல்லி இருக்கிறாள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.