லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலி – கேஎல் ராகுல் கோபம்!

லக்னோ சூப்பர் ஜெயண்டஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற கேஎல்ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக வீசியதால், மும்பை அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. பிறந்தநாளில் களம் கண்ட ரோஹித் சர்மா 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 10 ரன்னிலும், திலக் வர்மா 7 ரன்னிலும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் 5.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 27 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் இணைந்த இஷான் கிஷன் – நெஹல் வதேரா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இஷான் கிஷன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, நெஹல் வதேரா 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 18 பந்துகளில் 1 சிக்சர் 3 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 

பெரிய கிரவுண்ட்டாக இருந்தாலும் குறைவான ஸ்கோர் மட்டுமே சேஸிங் செய்ய வேண்டியிருந்ததால் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் வீரர்கள் நம்பிக்கையுடனே களம் கண்டனர். அர்ஷின் குல்கர்னி முதல் பந்திலேயே நுவான் துஷாரா வீசிய பந்தில் முதல் விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருக்கு பின் கேப்டன் கேஎல் ராகுல் ஸ்டொயினஸ் நங்கூரம்போல் நிலைத்து நின்று விளையாடி லக்னோ அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்து சென்றனர்.

ராகுல் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்டொயினஸ் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களும் அடங்கும். அவருக்குப் பிறகு களம் கண்ட நிக்லோலஸ் பூரன் 14 ரன்களும், தீபக் ஹூடா 18 ரன்களும் எடுக்க லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளை பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

போட்டியின்போது, அயூஷ் பதோனி ரன் அவுட் கொடுக்கப்பட்டதற்கு லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் அதிருப்தி தெரிவித்தார். பேட் கிரீஸூக்கு மேலே இருந்தும்கூட மூன்றாவது நடுவர் முக்கியமான கட்டத்தில் அவுட் கொடுத்துவிட்டார். இதனால், ராகுல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த லக்னோ அணியும் அதிருப்தி அடைந்தது. இருப்பினும் அந்த அணி வெற்றியை வசமாக்கியதால், இந்த பிரச்சனை பூதாகரமாகவில்லை. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.