கோவையில் இரவில் ஏற்படும் மின் தடையால் மக்கள் அவதி: மின்வெட்டு அபாயம் உள்ளதாக தொழில் துறையினர் தகவல்

கோவை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இருப்பை விட தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படும் மின்சாரம், கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள மிகவும் உதவி வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை காலங்களில் மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும். இவ்வாண்டு முதல் முறையாக தினசரி மின் நுகர்வு 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இருப்பினும் தற்போது வரை மின்வெட்டு பெரிய அளவில் அமல்படுத்தப்படவில்லை.

கடந்த சில நாட்களாக மின்சாரம் இருப்பை விட தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இரவு மின் தடை ஏற்பட தொடங்கியுள்ளது. மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) செயலாளர் சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது: வழக்கத்தை விட இவ்வாண்டு கோடை காலத்தில் தினசரி மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் புதிய ஏசி மெஷின் உள்ளிட்ட பொருட்கள் பயன்பாடு காரணமாக வழக்கத்தை விட 20 சதவீதம் மின்தேவை அதிகரித்துள்ளது. தற்போது வரை மின் வெட்டு பெரியளவில் அமல்படுத்தப்படவில்லை.

மே மாதம் தினசரி மின் தேவை 21 ஆயிரம் மெகா வாட்டாக உயர அதிக வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் தற்போது கையிருப்பில் உள்ள மின்சாரம் விநியோகத்திற்கு போதுமானதாக இருக்காது. எனவே மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியின் மொத்த திறன் 6 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.

தற்போதைய சூழலில் தினசரி மின் தேவையை பூர்த்தி செய்ய முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசு மின் உற்பத்தி துறையில் குறிப்பாக சூரிய ஒளி, காற்றாலை போன்ற திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் பிரதீப் கூறும்போது, ‘‘கடந்த 29-ம் தேதி தமிழகத்தின் மொத்த மின் கையிருப்பு 435.35 மில்லியன் யூனிட்டாகவும், தேவை 436.18 மில்லியன் யூனிட்டாகவும் இருந்தது. மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கும் என்பதும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் என்பதால் மின்விநியோகத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என நம்புகிறோம்,’’ என்றார்.

‘பீடர்’ இயந்திரம் திணறல்: மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவையில் தினமும் இரவு மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்சாரம் விநியோகிக்க உதவும் ‘பீடர்’ இயந்திரம் சீராக செயல்பட முடியாமல் திணறுகிறது. இருப்பினும் மக்கள் நலன் கருதி மாற்று ஏற்பாடுகள் செய்து இரவில் சீரான மின்விநியோகம் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.