கோயில்களில் உழவார பணிகளை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள், தன்னார்வலர்களின் விண்ணப்பம் 7 நாளில் பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் உள்ள பழமையான பாரம்பரியமிக்க கோயில்களின் தூய்மைப்பணிகளில் பக்தர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் உழவார பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வகையில் தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டும்.

மாநிலத்தில் உள்ள 189 தேவார வைப்பு தலங்கள், 267 நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்கள், 84 ஆழ்வார்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அடங்கிய குழு, மாவட்ட நீதிபதியுடன் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும்.

பின்னர் அந்த கோயில்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கோயில்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணிகளை கண்காணிக்க மாவட்டவாரியாக தனித்தனி உயர் மட்ட அலுவலர்கள் அடங்கிய நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இது தொடர்பாக அந்தந்த கோயில்களின் இணைஆணையரை அணுகி விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள்7 நாளுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இதுபோன்ற தன்னார்வலர்கள் மூலமாக கோயில் வளாகத்தில் உள்ள குளங்களை சுத்தம் செய்துஅங்கு அடர்த்தியாக வளர்ந்து இருக்கும் செடிகளை அகற்றி, கோயில்வாயில்கள் மற்றும் கதவுகளுக்கு வர்ணம் பூச பயன்படுத்தலாம். ஆனால் கோயில்களை உரிய முன் அனுமதியின்றி புதுப்பிக்கவோ, புனரமைப்பு பணிகளில் ஈடுபடவோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

அதேபோல உழவாரப்பணிகளில் ஈடுபடும் பக்தர்கள் கோயில்மீது எந்தவொரு உரிமையும் கோர முடியாது. அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த கோயிலை முழுமையாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்கட்டமைப்பை அவ்வப்போது ஆய்வு செய்து நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, பழுதுகளை சரிபார்க்க வேண்டும்.

கோயில்களில் நடைபெறும் உழவாரப் பணிகளை கண்காணிக்க அறநிலையத்துறையால் அமைக்கப்பட்டுள்ள நிலைக்குழு கோயில்களின் தற்போதைய நிலைகுறித்த விவரங்களை 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.