சர்ச்சைக்குரிய எம்.பி பிரிஜ் பூஷணுக்கு பதிலாக மகனுக்கு சீட் வழங்கியது பாஜக

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் கைசரகஞ்ச் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பிரிஜ் பூஷணுக்கு பதிலாக, இந்த முறை அவரது மகன் கரண் பூஷண் சிங்குக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. மல்யுத்த வீராங்கணைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷண் உள்ளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கைசர்கஞ்ச் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ள பிரிஜ் பூஷணின் இளைய மகன்தான் கரண் பூஷண் சிங். இவர் தற்போது உத்தரப் பிரதேச மாநில மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அதேபோல், கோண்டாவின் நவாப்கஞ்சின் கூட்டுறவு கிராம வளர்ச்சி வங்கியின் தலைவராகவும் உள்ளார்.

பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்த நிலையில், தேர்தலில் அவர் போட்டியிடுவது பற்றி பல ஊகங்கள் எழுந்தன. அவருக்கு பதிலாக இந்த முறை அவரது மகனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தன.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டினர். பிரிஜ் பூஷணுக்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா போன்ற மல்யுத்த வீரர்கள் பல வாரங்கள் போராட்டம் நடத்தினர். வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிஜ் பூஷணுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த 2019 ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரிஜ் பூஷண் கைசர்கஞ்ச் தொகுதியில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில், அதாவது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். என்றாலும், பாலியல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து இந்தமுறை அவரது மகனுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.