`என் பணத்தை செலவு பண்ணிக்கிட்டு என்னையே வெளியில போகச் சொல்வீங்களா?' – ஓயாத டப்பிங் யூனியன் சண்டை

சில மாதங்களுக்கு முன் நடந்த டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு, ‘யூனியனிலிருந்து ஏன் உங்களை நீக்கக் கூடாது’ எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இது குறித்து ராஜேந்திரனிடம் பேசினோம். ”எந்தவொரு சங்கம்னாலும் அதுல ஜனநாயகம் இருக்கணும். டப்பின் யூனியன் வரலாற்றில் இதற்கு முன்பெல்லாம் பல முறை நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வானாங்க. இந்த முறை அதை மாத்தியிருக்கோம். அண்ணன் ராதாரவி போட்டியிடலைன்னு தெரிஞ்சதும் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுறேன்னு அறிவிச்சேன். ஆனா அதன்பிறகு என்ன நினைச்சாரோ திடீர்னு அவரும் போட்டியிடறதா அறிவிச்சார். ஆனா நான் பின்வாங்குனா என் பின்னாடி வந்தவங்களுக்கு அது ஏமாற்றமா இருக்கும்கிறதால நான் முன் வச்ச காலை பின் வைக்கல.

தேர்தலின் போது பாத்தீங்கன்னா ஏகப்பட்ட தில்லுமுல்லு நடந்தது. ஒருவழியா தேர்தலும் முடிஞ்சு அவங்க அணியே ஜெயிச்சிட்டாங்க. ஜெயிச்சிட்டாங்களே, இனிமேலாச்சும் ஆக்கப்பூர்வமா ஏதாவது செய்யலாம்னு நினைக்கணும். அதை விட்டுட்டு, பழி வாங்கும் எண்ணத்துடனே அலையறாங்க. சங்கத்துக்கு எதிரா நடந்தேன்னு நடவடிக்கை எடுக்குறாங்களாம். தேர்தல்ல போட்டியிடறது எப்படி சங்கத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும்? விளக்கம் கேட்டு எனக்கு நோட்டீஸ் அனுப்பினாங்க. நான் பதில் அனுப்பிட்டேன். கூடவே இது யூனியன்கிறதால தொழிலாளர் நலத் துறைக்கும் அப்படியே முதல்வர் செல்லுக்கும் யூனியனின் இந்த நடவடிக்கை குறித்து ஒரு தகவலும் கொடுத்துட்டேன்.

ராதா ரவி

மத்த யூனியன்கள்ல எப்படியோ டப்பிங் யூனியனைப் பொறுத்த அளவுல உறுப்பினர்களை யூனியன் நீக்க முடியாது. ஏன்னா, யூனியன்ல சேர்கிற உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரும் ஒன்றரை லட்சம், ரெண்டு லட்சம்னு பணம் கட்டிச் சேர்கிறாங்க. அவங்க கட்டுற அந்தப் பணத்துலயும்., அவங்க வாங்குகிற சம்பளத்துல இருந்து தர்ற கமிஷன்லயும்தான் யூனியனே இயங்கிட்டிருக்கு. அதனால இங்க உறுப்பினர்கள்தான் முதலாளி. அவங்க பணத்துல யூனியனை நடத்திட்டிருக்கிற நிர்வாகிகள் அவங்களுடைய தொழிலாளர்கள். முதலாளியைத் தொழிலாளி வெளியில் அனுப்புகிற கூத்து எங்காச்சும் நடக்குமா? அதாவது என் பணத்தை வாங்கிச் செலவு பண்ணிக்கிட்டு என்னையே வெளியில போகச் சொல்லுவீங்களா
என்னுடைய விளக்கத்துலயும் இதைத்தான் சொல்லியிருக்கேன். என்னைப் பொறுத்தவரை இதுக்கு முன்னாடி என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம். ஆனா இப்ப என்னை மட்டுமல்ல இனிமேல் ஒருத்தரைக் கூட யூனியன்ல இருந்து நீக்க முடியாதபடி செய்யணும். அதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யப் போறேன்” என்கிறார்.

தனக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்ட விவகாரம் குறித்து தொழிலாளர் நலத்துறைக்கு ராஜேந்திரன் அனுப்பிய புகார் குறித்து யூனியனிடம் விளக்கம் கேட்ட தொழிலாளர் நலத்துறை, நடவடிக்கையைக் கைவிடும்படி அறிவுறுத்தியதாம்.

எனவே, தற்போது பெப்சியின் கடிதம் ஒன்றை வைத்து மீண்டும் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து யோசித்து வருகிறார்களாம்.

‘இப்படித்தான் பாடகி சின்மயியை யூனியனிலிருந்து வெளியேத்துனாங்க. அந்தப் பொண்ணு என்ன இப்ப டப்பிங் பேசாமலா இருக்கு. சமீபத்துல வெளியான ‘லியோ’வுல கூட பேசினாங்க. நடிகர் அரவிந்த் சாமி ஒரு படத்துக்கு டப்பிங் பேசினார். யூனியன்ல உறுப்பினரா இல்லாம அவர் எப்படிப் பேசலாம்னு சொன்னாங்க. ‘நான் பேசக் கூடாது’னு எழுத்துப் பூர்வமாக் கடிதம் கொடுங்க’னு அவர் கேக்க. தெறிச்சு ஓடிட்டாங்க. ஒரு யூனியன்னா ஒற்றுமையா இருந்து உறுப்பினர்களுக்கு நல்லது செய்யணும். அதை விட்டுட்டு வேண்டாத வேலைகளைத்தான் எப்பவும் செஞ்சிட்டிருக்கு டப்பிங் யூனியன்’ என நொந்து போய்க் கூறுகின்றனர், பெயர் குறிப்பிட விரும்பாத யூனியனின் நலம் விரும்பும் சில முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.