குரங்கு பெடல் விமர்சனம்: 80ஸ் கிட்ஸும் சைக்கிளும்! குழந்தைப் பருவ நினைவு எப்படி பயணிக்கிறது?

கோடை விடுமுறை காலத்தில் சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொள்ளும் 80ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியாவே இந்த `குரங்கு பெடல்’.

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையை ஒட்டியிருக்கும் கத்தேரி கிராமத்தில் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட, மாரியப்பன் எனும் சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடிவு செய்கிறான். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யும் அவர்களின் கேங்கில், வசதி படைத்த வீட்டைச் சேர்ந்த நீதி மாணிக்கம் புது சைக்கிள் வாங்கிவிடுகிறான். இந்நிலையில் மாரியப்பனுக்கும் நீதி மாணிக்கத்துக்கும் சண்டை வர, யார் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள், அதில் மாரியப்பன் சந்திக்கும் சவால்கள் என்ன, அவனுக்கும் அவனது தந்தைக்குமான உறவு எப்படியிருந்தது போன்ற கேள்விகளுக்குக் கிராமத்துப் பின்னணியில் நகைச்சுவை கலந்து பதில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன்.

குரங்கு பெடல் விமர்சனம்

சைக்கிள் ஓட்டுவதற்கான ஏக்கம், கைபிசைந்து கொண்டு நிற்கும் சுழலில் பதற்றம், தந்தையிடம் உண்மையைப் போட்டு உடைக்கும் இடத்தில் உணர்வுபூர்வமான நடிப்பென கலக்கியிருக்கிறார் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன். அவரது நட்பு வட்டத்தில் இருக்கும் மற்ற குழந்தைகளிடம் இயல்பான நடிப்பு சற்றே மிஸ்ஸிங். இயக்குநர் அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ‘நடராஜா சர்வீஸ்’ கந்தசாமியாக சைக்கிள் ஓட்டத் தெரியாத கண்டிப்பான தந்தையாக வரும் காளி வெங்கட், கடைசியில் கண்கலங்கி நிற்கும் இடத்தில் தன் உணர்வுப்பூர்வமான நடிப்பினால் அந்தக் கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். வருகின்ற காட்சிகளில் எல்லாம் கிச்சுகிச்சு மூட்டும் குடிகார கணேசனாக நக்கலான உடல்மொழி, வாய்ஸ் மாடுலேஷன்களில் பின்னியிருக்கிறார் ஜென்சன் திவாகர். மிலிட்டரியாக பிரசன்னா பாலசந்தர், வாத்தியாராக வரும் செல்லா ஆகியோரின் நடிப்பில் குறையேதுமில்லை.

ஜிப்ரான் வைபோதாவின் துள்ளலான இசையில் “கொண்டாட்டம் விட்ட லீவ வச்சு திங்கப் போறோம்” என்ற பாடல் முன்முனுக்க வைக்கிறது. அதேபோல படத்தின் பின்னணி இசையும் பீல் குட் உணர்வைக் கடத்தி நம்மைப் படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் சுமி பாஸ்கரன் உயரமான மலைத் தொடர்கள், ஆறு என ரம்மியமான காட்சிகளில் அழகான ஒளியுணர்வை செட் செய்தவர், சைக்கிள் ரேஸ்ஸில் ஒற்றையடிப் பாதையைப் பின்தொடரும் விதத்தில் கேமரா ஆங்கிள்களை பரபரவென பயன்படுத்தியிருக்கிறார். டிரோன் ஷாட்களும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. படத்தொகுப்பாளர் சிவானந்தேஸ்வரன் தடம் மாறிப் பயணிக்கும் இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னும் கத்திரி போட்டிருக்கலாம். சினிமா போஸ்டர்கள், 80ஸ் ரசிகர் மன்ற பேனர்கள், சினிமா கொட்டகை எனக் கலை இயக்கத்தில் சுமி பாஸ்கரனின் உழைப்பு தனியாகத் தெரிகிறது.

குரங்கு பெடல் விமர்சனம்

யதார்த்தமான மனிதர்கள், மிகையில்லா வசனங்கள், முதலில் யார் சைக்கிள் ஓட்ட போகிறார்கள் என்கிற சச்சரவு ஆகியவை திரைக்கதையை மித வேகத்தில் அழகாக பெடல் போட வைக்கிறது. ஓர் இடத்தில் அந்த சச்சரவு தீர்ந்த பின்னர், அடுத்துக் கதை எங்கே பயணிக்கப் போகிறது ஆவல் கூடுகிறது. ஆனால் அதைப் பூர்த்தி செய்யத் தவறிய இரண்டாம் பாதியின் திரைக்கதை குரங்கு பெடல் போட்டு எங்கெங்கோ பாதை மாறி நம்மையும் படத்தோடு ஒன்றவிடாமல் செய்கிறது.

அப்பா செய்ய முடியாத ஒன்றை மகன் செய்கிறான் என்ற மூலக்கதையிலிருந்து விலகி சைக்கிளுக்கு வாடகை கொடுப்பதிலுள்ள சிக்கல், காணாமல் போகும் சிறுவன், அதன் பிறகு வரும் ரேசிங் காட்சி என சில நோக்கமற்ற காட்சிகளின் தொகுப்பாகவே கடைசி 45 நிமிடங்கள் மாறியிருக்கின்றன.

லாட்டரி மோகம் கொண்ட தந்தைக்கு, ‘நடராஜா சர்வீஸ்’ என்று பெயர் வந்தது எப்படி என்கிற கிளைக்கதையை ‘தோற்பாவைக் கூத்தை’ வைத்து சொன்ன விதம் அருமை. இதே போல மற்ற துணை பாத்திரங்களுக்கும் சற்று ஆழம் கொடுத்து எழுதியிருக்கலாம். ‘சைக்கிள்’ எனும் ராசி அழகப்பனின் கதைக்குக் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ள இயக்குநர் அதற்கு நியாயம் செய்யும் விதத்திலான ஆக்கத்தைத் தந்திருக்கிறார். அதேபோல சைக்கிள் அல்லது ஏதேனும் ஒரு வாகனம் வைத்திருப்பது என்பது எப்படிப் பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்துக்கு உதவுகிறது, அதனால் கிடைக்கும் வெளியுலக அனுபவங்கள் எப்படி வாழ்க்கைக்கு அவசியமானவை போன்ற பாசிட்டிவ் மெசேஜ்கள் சரியாகவே க்ளிக் ஆகியிருக்கின்றன.

குரங்கு பெடல் விமர்சனம்

மொத்தத்தில் இரண்டாம் பாதி திரைக்கதை மட்டும் குரங்கு பெடல் போடாமல் இருந்திருந்தால் ஃபீல் குட் வெற்றிப் பாதையை இன்னும் கச்சிதமாகக் கடந்திருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.