துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் விருப்பம்: மோடி விமர்சனம்

பலாமு: துல்லியத் தாக்குதல்களுக்கு அஞ்சி பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாதிகள் விவகாரத்தைக் கையாள்வதில் கடந்த காங்கிரஸ் ஆட்சி பலவீனமாக இருந்ததாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் காதல் கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அதற்கு இணையாக தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டிருந்தது எனக் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை ஒட்டி ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் பேசியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பலவீனமாக இருந்தது. அவர்கள் பாகிஸ்தான் அமைதி காக்கும்படி காதல் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் பாகிஸ்தான் அந்தக் கடிதங்களுக்குப் பதிலாக நிறைய நிறைய தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் 2014-ல் மக்கள் பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். அவர்களின் வாக்குகள் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பார்வையை, தீவிரவாத ஒழிப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றியது. இப்போது பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல் காந்தி பிரதமராகிவிடமாட்டாரா என எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் பழைய படி காதல் கடிதங்கள் வரும், தீவிரவாதிகள் மூலம் அப்பாவிகளைக் கொல்லலாம் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது புதிய இந்தியா, இப்போதெல்லாம் தீவிரவாதிகளை அவர்களின் சொந்த இடத்துக்கே சென்று நாம் அழித்துவிடுகிறோம். முன்பெல்லாம் ஜார்க்கண்ட் எல்லையில் நம் பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருந்தது. அப்போதைய காங்கிரஸ் அரசு அதைப்பார்த்து உலகரங்கில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது.

துல்லியத் தாக்குதலும், பாலாகோட் தாக்குதலும் பாகிஸ்தானை உலுக்கிவிட்டது. இப்போது பாகிஸ்தான் உலகரங்கில் எங்களைக் காப்பாற்றுங்கள் எனக் கதறிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் பாகிஸ்தான், ‘இளவரசர் ராகுல்’ ஆட்சிக்கு வர விரும்புகிறது. ஆனால் இந்திய மக்கள் நிலையான அரசையே விரும்புகிறார்கள்.
2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நக்சல் தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளன. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. உங்களின் வாக்குகள் தான் ஜம்மு காஷ்மீர் மக்களைக் காப்பாற்றியுள்ளது. நக்சல் தீவிரவாதத்தில் இருந்து நிறைய தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்துள்ளது.

முன்னதாக, ராகுல் காந்தி சமதர்ம கொள்கை கொண்டவர் என பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி பாராட்டி இருந்தார். இன்று காலை இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “ராகுல் காந்தி தனது கொள்ளுத் தாத்தாவைப் போல் தன்னகத்தே ஒரு சமதர்மவாதியைக் கொண்டுள்ளார். இந்தியாவின் 30 அல்லது 40 குடும்பங்களே நாட்டின் 70 சதவீத சொத்துக்களின் அதிபதியாக இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். இங்கேயும் அப்படித்தான். பாகிஸ்தான் பிசினஸ் கவுன்சிலில் உள்ள ஒரு சிலர் மட்டுமே நாட்டின் 75 சதவீத சொத்துக்களின் உரிமையாளர்களாக உள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை நடந்து 75 ஆண்டுகள் ஆகியும் இங்கே எதுவுமே மாறவில்லை.” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி, இன்றைய ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியை வெகுவாக சாடியுள்ளார். ஜார்க்கண்டில் உள்ள 12 மக்களவை தொகுதிகளுக்கும் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 தேர்தலில் இவற்றில் 11 இடங்களை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.