பாராளுமன்றம் மே 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும்

பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கும் ‘வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் குறித்த விவாதம் மே 07ஆம் திகதி

பாராளுமன்றம் மே மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மே மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), பராட்டே சட்டத்தை 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், சத்திய ஸ்ரீ கணபதி பக்தி ஜன சேவா மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டுக்காகப் பிரேரிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக (அரசாங்கம்)நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 மே மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்காக (04 வினாக்கள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூலவிடைக்கான வினாக்களுக்காக (05 வினாக்கள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப. 5.00  மணி முதல் பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக (இரண்டு வினாக்கள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 மே மாதம் 09ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தச்) சட்டமூலம்  (இரண்டாம் மதிப்பீடு) விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் பி.ப. 5.00  மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதம் நடைபெறும்.

மே மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ யு.எல்.எம். பாரூக், கெளரவ அசோக ஜயவர்தன, கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதற்காக மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.