வரலாற்றில் சந்தேகத்துக்குரிய நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பதிலடி

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், காஷ்மீர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் குறித்து எதிர்மறை கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதர் ருசிரா கம்போஜ் கூறியதாவது:

தற்போதைய இக்கட்டான சூழலுக்கு மத்தியில் இந்த சபை அமைதிக்கான பண்பாட்டை வளர்த்தெடுக்க முயல்கிறது. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் முனைப்பாக இருக்கிறோம். ஆகையால் அண்டை நாட்டு உறுப்பினர் முன்வைக்கும் கண்ணியமற்ற கருத்துக்களைக் கண்டுகொள்வதில்லை.

ஏனெனில் நமது கூட்டு முயற்சி இத்தகைய அழிவுக்கு வழிவகுக்கும் பேச்சால் தடம்புரண்டுவிடக்கூடாது. ஆகையால் அரசியல் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் காக்கும்படி உறுப்பினரிடம் வலியுறுத்துகிறோம். ஒருவேளை வரலாறு நெடுக சந்தேகத்துக்குரிய தடம்பதிப்பதையே தனது அடையாளமாகக் கொண்ட நாட்டிடம் இத்தகைய கண்ணியத்தை எதிர்பார்ப்பது அதிகமோ என்னவோ?

கருணை, பரஸ்பர புரிதல், கூடிவாழ்தல் மற்றும் அமைதி பண்பாட்டு ஆகியவற்றை போதிக்கும் அனைத்து சமயங்களுக்கும் நேர்எதிரானது பயங்கரவாதம். ஒட்டுமொத்த உலகமும் ஒரு கூட்டுக் குடும்பம் எனும் எமது தேசத்தின் முழக்கத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் தமது நெஞ்சில் ஏந்த வேண்டும். இந்து, புத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களுக்கு மட்டும் இந்திய நாடு தாய்வீடு அல்ல.

இஸ்லாம், யூத மதம், கிறிஸ்தவம், பார்சி ஆகிய சமயங்களையும் இந்நாடு கட்டிக் காக்கிறது. மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு அகதிகள் ஆக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமையை நம்பும் இந்த தேசம் அடைக்கலம் கொடுத்திருக்கிறது. பன்மொழிகளும் பல மதங்களும் சகிப்புத்தன்மையுடன் இணைந்து வாழும் பண்பாட்டின் அடையாளம் இந்தியா.

தீபாவளி, ஈகை திருநாள், கிறிஸ்துமஸ், நவ்ரூஸ் போன்ற மத எல்லைகளை கடந்து அனைத்து பண்டிகைகளும் பல்வேறு சமூகத்தினரால் இங்கு மகிழ்வுடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இன்று உலகெங்கிலும் மதரீதியாக சகிப்பின்மையும், பாகுபாடும், வன்முறையும் தலைவிரித்தாடுகிறது. ஆங்காங்கே தேவாலயங்களும், மடாலயங்களும், குருத்துவாராக்களும், மசூதிகளும், கோயில்களும் தாக்கப்படுகின்றன.

நமது கலந்துரையாடல்களும் இவற்றை மையப்படுத்தி இருத்தல் அவசியமாகிறது. இத்தகைய சவால்களுக்குத் தீர்வு காணும் விதமாக நமது கொள்கை, உரையாடல்கள் மற்றும் சர்வதேச பரிமாற்றங்கள் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.