குண்டை தூக்கிப்போட்ட சிஎஸ்கே… இலங்கைக்கு பறந்த பதிரானா – தீடீர்னு என்னாச்சு?

Matheesha Pathirana Returns To Sri Lanka: சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 கோப்பைகளை வென்றிருந்தாலும், 14 சீசன்களை விளையாடி 12 முறை பிளே ஆப் தொடருக்கும், 10 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி சிஎஸ்கேதான். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ரசிகர் படை என்பது மற்ற அணிகளுக்கு இல்லை என்பதும் அந்த அணி மீது அதிக கவனம் குவிய முக்கிய காரணம்.

ஆனால் இவை அனைத்தும் எம்எஸ் தோனி (MS Dhoni) என்ற ஒற்றை வீரர் சிஎஸ்கேவில் இருப்பதால்தான். அந்த வகையில் இது தோனியின் கடைசி சீசன் என கூறப்படுகிறது என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் முக்கிய விருப்பமாக உள்ளது. தோனி இந்த முறை கேப்டனாக இல்லாவிட்டாலும் அவரை காண அனைத்து மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானங்களுக்கு வருகை தருகின்றனர். 

சிஎஸ்கே போட்ட குண்டு…

இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசன் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. 10 போட்டிகளில் சிஎஸ்கே விளையாடி 5 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி என 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. ரன்ரேட் நன்றாக இருப்பதால் மீதம் இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வென்றாலே பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும் என்ற நிலையில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான (PBKS vs CSK) போட்டியிலும் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் சிஎஸ்கே அணி தொடர்ந்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வருகிறது.

குறிப்பாக இன்றைய போட்டியிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பதிரானா இடம்பெறாதது பலரும் அதிர்ச்சியை அளித்தது. டாஸின் போது முஸ்தபிசுருக்கு பதில் சான்ட்னர் வருவதாக மட்டுமே ருதுராஜ் கூறிய நிலையில் பதிரானா குறித்து எதுவும் கூறவில்லை. காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை என்றே அனைவரும் நினைத்தனர். இந்நிலையில் போட்டி தொடங்கிய சில ஓவர்களிலேயே சிஎஸ்கே நிர்வாகம் அதன் சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல்களை வெளியிட்டது. 

அதாவது, மதீஷா பதிரானா (Mathisha Pathirana) இலங்கை நாட்டுக்கு திரும்புகிறார் என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது. மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் தொடங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக பதிரானாவும், அவரின் சக நாட்டு வீரருமான தீக்ஷனாவும் இலங்கைக்கு விசாவை புதுப்பிக்க சென்றிருந்தனர். மேலும், அவர்கள் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்திற்கு நேற்றுதான் வருகை தந்தனர். 

பதிரானா நாடு திரும்ப காரணம்

அப்படியான நிலையில், பதிரானா திடீரென ஏன் இன்று நாடு திரும்பினார் என கேள்விகள் எழுந்தது. அதற்கும் சிஎஸ்கே அந்த அறிவிப்பில் பதில் அளித்துள்ளது. சிஎஸ்கே அணி அதன் இணைய தளத்தில்,”சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா, தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அதற்கு சிகிச்சை பெற இலங்கை திரும்புகிறார். 

 #WhistlePodu #Yellove

— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2024

வலது கை வேகப்பந்து வீச்சாளரான பதிரானா, நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி 7.68 எகானமியில் 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பத்திரனா விரைவில் குணமடைய சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்த்துகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் சூழலில், பதிரானா மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.