பெங்களூருவுக்கு எதிரான தோல்விக்கு இது தான் காரணம் – சுப்மன் கில் பேட்டி

பெங்களூரு,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ், யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 64 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ்-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை முதல் இரண்டு ஓவர்களில் பார்க்க நினைத்தோம். அதன் பிறகு அதில் கிடைக்கும் ஐடியாவை வைத்து விளையாட வேண்டும் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது. இந்த மைதானத்தில் 170 முதல் 180 ரன்கள் வரை அடித்திருந்தால் அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்.

நாங்கள் பவர் பிளேவில் பேட்டிங் செய்த விதமும், பவர் பிளேவில் பந்து வீசிய விதமும் மோசமாக இருந்ததாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது. இந்த போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டதாலே இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனை களம் இறக்கினோம். அதனால் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரையும் நாங்கள் இழந்து விட்டோம். அடுத்த போட்டியில் இந்த தோல்வியை பற்றி நினைக்காமல் புதிதாக ஆரம்பிப்பது போல் ஆரம்பிக்க உள்ளோம். இந்த தோல்வி வருத்தம் அளித்தாலும் அதனை கடந்து சென்றாக வேண்டும்.

இந்த போட்டியின் மூலம் நிறைய பாசிட்டிவான விசயங்களை எடுத்துச் செல்கிறோம். இனிமேல் நாங்கள் இதே போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க இந்த தோல்வி எங்களுக்கு ஒரு பாடத்தை தந்துள்ளது. இதற்கு அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் அடுத்தடுத்து போட்டிகளை எதிர்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.