பிரிட்டிஷ் நாட்டவர், சிறை தண்டனை பெற்றவர்: ரேபரேலியில் ராகுல் காந்தியின் வேட்புமனுவை நிராகரிக்க கோரி புகார்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலம் காரணமாக இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில், ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி ரே பரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனிருத் பிரதாப் சிங் என்பவர் சார்பில் வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் இந்தப் புகார் மனுவை அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் பாண்டே கூறியதாவது: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைதான் விதித்துள்ளது. இந்த வழக்கில் எந்த இறுதி தீர்ப்பும் வழங்கவில்லை. 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுகிறார்கள்.

அவதூறு வழக்கில் சிறை தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதற்கும், தேர்தலில் போட்டியிடும் அனுமதிக்கும் தொடர்பு இல்லை. இரண்டாவதாக கடந்த 2006-ம் ஆண்டு தனது குடியுரிமை பற்றி ராகுல் காந்தி கூறும் போது, தான் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பவர் சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, ரே பரேலி தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளேன். எனது புகாரையடுத்து, ராகுல் காந்தியின் பிரதிநிதியை அழைத்து பேசினார்கள். அதன்பிறகு எனது புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு வழக்கறிஞர் அசோக் பாண்டே கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் பால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இதற்கு முன்பும் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த முறையும் அவரது வேட்பு மனு தகுதியானதுதான். அத்துடன், புகார் அளிப்பதற்கான கால கெடு முடிந்த பிறகு ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.