கோவை வாளையாறு அருகே ரயில் மோதி யானை உயிரிழப்பு

கோவை: கோவை வாளையாறு பகுதியை அடுத்த பன்னிமடை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை ரயில் மோதி உயிரிழந்தது. இதுகுறித்து பாலக்காடு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், போத்தனூர் முதல் கேரள மாநிலம் பாலக்காடு வரையிலான ரயில்வே வழித்தடத்தில், மதுக்கரை- வாளையாறு வரை உள்ள ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. கோவையில் இருந்து செல்லும் பாதை ‘ஏ லைன்’ எனவும், கேரளாவில் இருந்து வரும் பாதை ‘பி லைன்’ எனவும் அழைக்கப்படுகிறது.

இதில் வனப்பகுதி வழியாக ரயில்கள் செல்லும்போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரங்களில் குறிப்பிட்ட வேகத்தை விட அதி வேகமாக ரயில்கள் இயக்கப்படுவதால் அவ்வப்போது தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் 35-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 2021 நவம்பர் மாதம் மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி பகுதியில் ரயில் மோதியதில் கருவுற்ற பெண் யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்த நிலையில் பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் ரயில் பாதையில் யானைகள் அதிகமாக தண்டவாளத்தை கடக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் யானைகள் ரயில் பாதையை கடக்கும் வகையில் இரண்டு இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வனப்பகுதியான மதுக்கரை வனச்சரகத்தில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை கொண்டு நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி ரயில் பாதை அருகே வரும்போதே அலாரம் மற்றும் எச்சரிக்கை தகவல் வனத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு சென்று விடுவதால் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானைகள் ரயில் பாதையை கடக்க உதவி செய்வதால் யானைகள் ரயிலில் அடிபடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (மே.7) அதிகாலை கேரள மாநிலம் வாளையாறு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் அருகே பெண் யானை ஒன்று ரயில் பாதையை கடக்க முயன்றது. அப்போது பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் யானை மீது மோதியது.

இதில் யானையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும் அந்த யானை அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள நீரோடை அருகே சென்றது. ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடியது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து பாலக்காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் பாலக்காடு – மதுக்கரை இடையே ரயிலில் அடிபட்டு 35-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் ரயில் பாதையை இரவு நேரங்களில் கடக்கும் போது வேகமாக வரக்கூடிய ரயில்கள் மோதுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இரவு நேரத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில் ஒரு சில ரயில் ஓட்டுநர்கள் கடைபிடிக்காததால், இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு இடங்களில் யானைகள் ரயில் பாதை கடக்கும் வகையில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு தண்டவாள பகுதியில் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல கேரள வனப்பகுதியிலும் யானைகள் கடக்கும் பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.