`வாக்கு ஜிகாதா, ராம ராஜ்ஜியமா… எது நாட்டை ஆளவேண்டும்?' – மத்தியப் பிரதேசத்தில் மோடி பேச்சு

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது உரையாற்றிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சியான காங்கிரஸின் நோக்கம் மிகவும் ஆபத்தானது. அது எனக்கு எதிராக வாக்களிப்பது ஜிகாத் என அழைப்பு விடுக்கிறது. வாக்கு ஜிகாத் நாட்டை ஆளவேண்டுமா அல்லது ராம ராஜ்ஜியம் நாட்டை ஆளவேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்திய கூட்டணிக் கட்சிகள் வெகுஜனங்களைப் பற்றி கவலைப்படவில்லை…

ராகுல் காந்தி

அவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத் தேர்தலில் போராடுகிறார்கள். அவர்களுக்கு நாட்டை விட அவர்களின் “விராசத்” (வம்சம்) முக்கியமானது. அவர்கள் தங்கள் அதிகாரத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லலாம். “அப்னா காம் பந்தா…” (சொந்த வேலையைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும்) என்ற பிரபலமான பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் என்று மிரட்டுகிறார்கள்.

இங்கே காங்கிரஸில் உள்ளவர்களும் மோடிக்கு எதிராக வாக்களிப்பது ஜிகாத் என அறிவித்திருக்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை மோடிக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களிக்கச் சொல்கிறார்கள். காங்கிரஸ் எந்த நிலையில் இருக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். முழுமையாக தலைவணங்கிவிட்டது. காங்கிரஸுக்கு பயங்கரமான நோக்கங்கள் இருப்பதாகவும், அதன் சதிகள் ஆபத்தானவை என்றும், 20-25 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர்களாகவும், தலைவர்களாகவும் இருந்தவர்கள், இப்போது கட்சியை விட்டு வெளியேறி வந்து சொல்கிறார்கள்.

மோடி – கார்கே

ராமர் கோவிலுக்குச் சென்றபோது, காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டிய அளவுக்குத் துன்புறுத்தப்பட்டதாக ஒரு பெண் கூறினார். காங்கிரஸை விட்டு வெளியேறிய மற்றொரு நபர், முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகளால் கட்சி கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸை விட்டு வெளியேறிய மற்றொரு தலைவர், ஷா பானோ வழக்கில் அவரது தந்தை செய்தது போல், ராமர் கோவில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸின் இளவரசர் விரும்புகிறார் எனக் குறிப்பிட்டார்.

காங்கிரஸும் இந்தியக் கூட்டணியும் நமது நம்பிக்கையைப் பற்றியோ, தேச நலனைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. தேச விரோத அறிக்கைகளை வெளியிடுவதில் காங்கிரஸ் கட்சியினரிடையே போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும் காங்கிரஸ் பாகிஸ்தான் மீதான காதல் உச்சத்தை எட்டுகிறது. எங்கள் ராணுவம் தீவிரவாத தாக்குதல்களை நடத்துகிறது, பாகிஸ்தான் அப்பாவி என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர் கூறினார்.

மோடி

மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறிய காங்கிரஸ் தலைவரின் வெட்கமற்ற தன்மையைப் பாருங்கள். காங்கிரஸ் இளவரசரிடம் நான் கேட்கிறேன், உங்கள் சகாக்கள் அப்படிப் பேசுவதன் நோக்கம் என்ன? ஏன் பாகிஸ்தான் மீது இவ்வளவு அன்பும், நமது ராணுவத்தின் மீது இவ்வளவு வெறுப்பும்? இதற்கு முன் நீங்கள் செலுத்திய உங்கள் வாக்கு, இந்தியாவை உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியது.

370 வது பிரிவு (ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது) ரத்து செய்யப்பட்டது, ஒரு பழங்குடிப் பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக்கியது. உங்கள் வாக்கு இந்தியாவில் வறுமையில் வாடிய 25 கோடி மக்களை உயர்த்தியுள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை அமைப்பதற்கான 500 ஆண்டுகால காத்திருப்புக்கு உங்கள் வாக்கு மூலம் முடிவு கிடைத்துள்ளது. மக்களின் முயற்சியால் நாடு முன்னேறி வருகிறது.” எனக் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.