“இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது” – மோடி குற்றச்சாட்டு

மெகபூப்நகர்(தெலங்கானா): இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானாவின் மெகபூப் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா நதிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பகுதி இது. ஆனால், இப்பகுதி விவசாயிகள் கூலி வேலைக்காக புலம் பெயர்ந்துள்ளனர். மாநில அரசு இப்பகுதியில் பாசன திட்டங்களை செயல்படுத்தவில்லை. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்று பொய்யான வாக்குறுதியை அளித்து அவர்களின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது.

காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், சமூகத்தை விஷமாக்குகிறது. தென்னிந்திய மக்களை ஆப்பிரிக்கர்கள் என்று அமெரிக்காவில் அமர்ந்திருக்கும் இளவரசரின்(ராகுல் காந்தி) ஆலோசகர் கூறுகிறார். தெலங்கானா மக்களை அவர் ஆப்ரிக்கர்களாக பார்க்கிறார். இந்திய மக்களின் தோல் நிறத்தைக் கொண்டு யார் இந்தியர்கள், யார் ஆப்ரிக்கர்கள் என பிரிக்க காங்கிரஸ் முடிவெடுத்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் மனப்பான்மை இந்துக்களுக்கு எதிரானது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை, மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், மோடி தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பவர்.

காங்கிரஸ் இந்துக்கள் மற்றும் இந்து பண்டிகைகளை மிகவும் வெறுக்கிறது. அது இப்போது தினமும் அம்பலமாகி வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டக்கூடாது என்று கூட இளவரசரின்(ராகுல் காந்தியின்) குரு கூறினார். ராமர் கோயில் கட்டுவதும், ராம நவமியைக் கொண்டாடுவதும் இந்தியாவுக்கு எதிரானது என அவர் கூறினார். அயோத்திக்கு சென்று ராமநவமி கொண்டாட விரும்பினால், நீங்கள் இந்தியாவுக்கு எதிரானவரா? இந்துக்களை தங்கள் நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது. அதனால்தான் அவர்கள் வாக்கு-ஜிஹாத் பற்றி பேசுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.