இந்தியா வெறும் நட்பு நாடல்ல அதற்கும் மேலே: அமெரிக்கா நெகிழ்ச்சி| Dinamalar

வாஷிங்டன்: “இந்தியா வெறும் நட்பு நாடு மட்டுமல்ல, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விடவும் தினசரி அடிப்படையில் இந்தியாவுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகிறோம்.” என அமெரிக்க வெளியுறவு செயலர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன. இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது தலைமையை மீட்டெடுக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்து உள்ளது.

சீனாவுடனான போட்டி முதல் பருவநிலை மாற்றம், பெருந்தொற்று வரை பல சவால்களை சந்திக்க அமெரிக்காவானது அதன் நீண்டகால கூட்டணிகளை நவீனமயமாக்கியுள்ளது. நட்புகளை வலுப்படுத்தியது. பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் புதுமையான இணைப்புகளை உருவாக்கியது.
இந்நிலையில் ஆசியா மற்றும் பசிபிக் விவாகரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலர்கள் டேனியல் கிரிடன்பிரிங்க் மற்றும் டொனால்ட் லூ ஆகியோர் தொலைபேசி மூலமான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா குறித்து உயர்வாக பேசினார்கள்.
மேலும் அக்கூட்டத்தில் அவர்கள் தெரிவித்ததாவது: உக்ரைன் – ரஷ்யா பிரச்னை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வெளிப்படையான விவாதங்களை மேற்கொண்டனர். இது ஒரு சிக்கலான பிரச்னை. இருப்பினும் இரு தரப்பும் எல்லா வகையான பிரச்னைகள் குறித்தும் பேசுவோம். குவாடின் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழி பற்றியும் விவாதித்துள்ளனர்.

latest tamil news

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார கட்டமைப்பு பற்றி நாங்கள் ஆர்வமாக உள்ளோம். விநியோகச் சங்கிலிகள், எரிசக்தி, நிதி கட்டமைப்பு மற்றும் வர்த்தகச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் கூட்டு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். இப்பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை ஊக்குவிப்பதில் இந்தியா மிகவும் ஆர்வமாக உள்ளது. இப்பிராந்தியத்தில் மெரிக்கத் தலைமையை மீட்டெடுக்க பிடன் நிர்வாகம் வகுத்துள்ள திட்டத்தில் இந்தியா வெறும் நட்பு நாடு மட்டுமல்ல. இப்போது செய்யப்படும் தேர்வுகள், பிராந்தியத்தின் பாதுகாப்பான மற்றும் உறுதியான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். என கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.