ஜேர்மனியில் விரைவாக நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்காக சில வழிமுறைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?



ஜேர்மனியில் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கு மக்கள் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில், அதை விரைவாக பெறுவதற்கான வழிமுறைகள் சில உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

முதலில், நிரந்தர வாழிட உரிமம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்…

Settlement permit என்றும் அழைக்கப்படும் இந்த நிரந்தர வாழிட உரிமம் ( permanent residency), தடையின்றி ஜேர்மனியில் வாழ உதவும் உரிமையாகும்.

விசாக்களைப் போல இதற்கு காலாவதி திகதி கிடையாது, அதைப்பெறுவதற்கு ஒருவர் வேலை செய்துகொண்டிருக்கவேண்டும், படித்துக்கொண்டிருக்கவேண்டும், சுய தொழில் செய்யவேண்டும் என்ற நெறிமுறைகள் எல்லாம் கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், ஜேர்மனியில் நீண்ட காலம் வாழ விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

பொதுவாக, ஜேர்மன் நிரந்தர வாழிடம் பெற ஒருவர் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும், நன்றாக ஜேர்மன் மொழி பேசத்தெரிந்திருக்கவேண்டும், ஓய்வூதியத்துக்காக ஐந்து ஆண்டுகள் தொகை செலுத்தியிருக்கவேண்டும் மற்றும் நிரந்தர வருமானம் இருக்கவேண்டும் என சில விதிமுறைகள் உள்ளன.

ஆனால், விடயம் என்னெவென்றால், ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்காமலே சீக்கிரம் நிரந்தர வாழிட உரிமம் பெற சில வழிமுறைகள் உள்ளன என்பதுதான்…

அவை என்னென்ன என்று பார்ப்போம்.

ஒரு பட்டப்படிப்பு அல்லது தொழிற்பயிற்சி பெற்றிருத்தல்

ஜேர்மன் பல்கலை ஒன்றில் படிப்பது அல்லது ஜேர்மன் தொழிற்கல்வி பெறுவது ஒருவருக்கு விரைவாக நிரந்தர வாழிட உரிமம் பெற உதவும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயமாக உள்ளது.

நீங்கள் ஒரு இரண்டு வருட MA பட்டப்படிப்பு முடித்தவராக, அல்லது ஒரு பிளம்பராக தொழிற்பயிற்சி பெற்றவராக இருந்தால், வேலை ஒன்று கிடைத்ததும், அந்த வேலையில் இரண்டு ஆண்டுகள் முடித்ததுமே நீங்கள் நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், ஜேர்மனிக்கு வந்ததுமே நீங்கள் ஒரு வேலையில் சேர்ந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ஐந்து ஆண்டுகளுக்கு பதிலாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஒரே விடயம், உங்களுக்கு B1-level அளவுக்கு ஜேர்மன் மொழி தெரிந்திருக்கவேண்டும்.

திறன்மிகு பணியாளராக இருத்தல்

நீங்கள் முறையாக படித்து திறன் மிகு பணியாளராக ஜேர்மனியில் பணி செய்துகொண்டிருந்தால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த காலகட்டத்தில் நீங்கள் ஓய்வூதியம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கான கட்டணம் செலுத்திவந்திருக்கவேண்டும். உங்களுக்கு B1-level அளவுக்கு ஜேர்மன் மொழியும் தெரிந்திருக்கவேண்டும்.

நீங்கள் வெற்றிகரமான ஒரு தொழிலுக்குச் சொந்தக்காரர் என நிரூபியுங்கள்

நீங்கள் விரைவாக ஜேர்மன் நிரந்தர வாழிடம் பெற இன்னொரு வழி, ஒரு சுய தொழில் செய்பவராக ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாதிப்பவராக இருப்பதாகும்.

அதாவது, உங்கள் தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்வதற்கு போதுமானதாக இருக்கவேண்டும். ஓய்வூதியத்துக்கான உங்கள் பங்களிப்பைச் செய்திருக்கவேண்டும், அல்லது, உங்கள் வயதான காலத்தில் உங்களுக்கு உதவுவதற்காக, உங்களிடம் சுமார் 200,000 யூரோக்கள் மதிப்பிலான சொத்து இருப்பதை நிரூபிக்க வேண்டும். அத்துடன், மருத்துவக் காப்பீடு அவசியம் ஆனால், மொழித்திறன் அவசியமில்லை.

இந்த தகுதிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால், மூன்று ஆண்டுகளிலேயே நீங்கள் நீங்கள் நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜேர்மானியர் ஒருவரை துணைவராக கொண்டிருத்தல்

நீங்கள் ஜேர்மானியர் ஒருவரை கணவராக/மனைவியாக கொண்டிருக்கும் பட்சத்தில், எளிதாக நீங்கள் நிரந்தர வாழிட உரிமம் பெறலாம். வழக்கம் போல உங்களுக்கு B1-level அளவுக்கு ஜேர்மன் மொழி தெரிந்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு குடும்பமாக ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும்.

இதற்கிடையில், புதிய அரசு புலம்பெயர்வோருக்காக பல சட்ட மாற்றங்களைக் கொண்டுவர இருப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், நிரந்தர வாழிட உரிமம் பெறுவது மேலும் எளிதாகலாம்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.