சொப்னாவின் வேலை ஒரே நாளில் பறிப்பு

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைதானவர் சொப்னா. ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் இருந்தவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் தாய், குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்ஆர்டிஎஸ் (ஹை ரேஞ்ச் ரூரல் டெவலப்மன்ட் சொசைட்டி) என்ற என்ஜிஓ நிறுவனத்தில் சொப்னாவுக்கு ₹ 43,000 சம்பளத்தில் அதிகாரியாக வேலை கிடைத்தது. பாஜ, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக் கொடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள 300 ஆதிவாசி குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் நேற்று சொப்னா பணியில் சேர்ந்தார். இந்த வேலை தன்னுடைய வாழ்க்கையில் 2வது பாகத்தின் தொடக்கம் என்றும், தற்கொலை எண்ணத்தில் இருந்த தனக்கு புதிய வேலை கிடைத்தது பெரிய விஷயம் என்றும் சொப்னா கூறினார். ஆனால் இந்த வேலை அவருக்கு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. சொப்னாவை வேலையில் இருந்து நீக்க உத்தரவிட்டு இருப்பதாக எச்ஆர்டிஎஸ் நிறுவன தலைவர் கிருஷ்ணகுமார் தெரிவித்து உள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் சொப்னாவுக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு சம்பளம் வழங்கினால் அதைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.