2015 தொடங்கி 2021 வரை பூமியின் வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டுகள்: ஐ.நா. அறிக்கை

ஜெனீவா: 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2021 வரையிலான கடந்த 7 ஆண்டுகள்தான் இப்பூமியின் வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டுகளாக அறியப்படுவதாக (World Meteorological Organization) சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘State of Global Climate Report 2021’ எனும் பெயரில் இந்த அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

இத்தனைக்கும் 2020 தொடங்கியே குளிர் நிகழ்வான லா நினா நிகழ்வு நிலவி வருகிறது. இந்த நிகழ்வின்போது சராசரி வெப்பநிலை குறைவாகவே இருக்கும். அப்படியிருந்தும் தொடர்ச்சியாக கடந்த 7 ஆண்டுகள் வெப்பமான ஆண்டுகளாக அறியப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் வானிலை ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வின்படி, 2021ல் சராசரி உலக வெப்பம் 1.11 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் (ஜனவரி-செப்டம்பர்) புவியின் சராசரி வெப்பநிலை 1850-1900 காலத்தில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட 1.09° செல்சியஸ் அதிகம்.

2015 பாரிஸ் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் உலக நாடுகள் புவி வெப்பமயமாதலைக் குறைப்பது என சம்மதித்தன.ஆனால், 1980ல் இருந்தே தொடர்ந்து ஒவ்வொரு பத்தாண்டுகளும் முந்தைய தசம ஆண்டுகளைவிட வெப்பமானதவே இருப்பதாக சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

உலக வானிலை அமைப்புத் தரவுகளின்படி 2021ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆறாவது அல்லது ஏழாவது ஆண்டாகும்.

இது குறித்து சர்வதேச வானிலை ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளர் டலாஸ் கூறுகையில், ” 2021ல் கனடாவில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது சஹாரா பாலைவனத்தின் அல்ஜீரியாவில் பதிவாகும் வெப்பத்துக்கு சமமானது. ஆசியாவிலும், ஐரோப்பாவின் பல நாடுகளிலும் வெள்ளம் ஏற்பட்டது. ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டது. காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 2021ல் பல்வேறு பகுதிகளிலும் எதிர்பாராத இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு, பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

இந்தியாவிலும், 2021 ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த வாரம் இது தொடர்பாக ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2021 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது. இதற்கு முன்னதாக 2009, 2010, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகள் இந்தியாவில் அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளாக இருந்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.